சான்றிதழ் ; விமர்சனம்


கருவறை என்கிற கிராமத்தில் மனிதர்கள் அனைவருமே நேர்மையாக இருக்கிறார்கள். கிராமத்திற்கு வேண்டிய வசதிகளை தாங்களே செய்து கொள்கிறார்கள். கணக்கு வழக்குகளை ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சரி பார்க்கிறார்கள்.

இந்த ஊருக்குள் யாராவது தவறான நோக்கத்துடன் வந்தால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தும் விதமாக அந்த ஊர் தனி அறையில் அடைத்து வைக்கிறார்கள். அதேசமயம் அப்படி மாட்டிக் கொண்டவர்கள் ஊருக்குள் சுதந்திரமாக உலா வரலாம். அனைத்து நிகழ்வுகளையும் பார்த்து ரசிக்கலாம்.. ஆனால் ஊரை விட்டு தப்பிப் போக முடியாது.

இப்படி மக்கள் தங்களுக்கான விதிகளை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வரும் கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து அரசாங்கம் சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்கிறது, ஆனால் அந்த விருதை கிராம மக்கள் வாங்க மறுத்து விடுகிறார்கள்.

இதனால், ஆத்திரமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.. அதேசமயம் இப்படி நேர்மையின் மறு உருவமாக இருக்கும் இந்த ஊரில் ஒரு காலத்தில் எல்லாருமே அவரவர் இஷ்டத்திற்கு தான்தோன்றித்தனமாக இருந்தவர்கள் தான். அந்த மக்களை நல்வழிப்படுத்த ஹரிகுமார் மற்றும் அவர்கள் நண்பர் அருள்தாஸ் இருவரும் முயற்சிக்கிறார்கள்.

அவர்களால் எப்படி இந்த ஊரை, மக்களை மாற்ற முடிந்தது ? அதற்கு அவர்கள் செய்த தியாகம் என்ன ? கொடுத்த விலை என்ன ? ஏன் இந்த மக்கள் இப்படி நல்லவர்களாக மாறினார்கள் ? இந்த ஊரை களங்கப்படுத்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் பலித்ததா என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

இந்த படத்தில் யார் யார் எப்படி நடித்து உள்ளார்கள்? ஒளிப்பதிவு, இசை எப்படி அமைந்திருக்கிறது என்பதை எல்லாம் பற்றி பேசுவதற்கு பதிலாக இதில் சொல்ல வந்த விஷயத்தை, காட்சிப்படுத்தி இருக்கும் விஷயங்களை பற்றி பேசினால் சரியாக இருக்கும்.

மாலை 6 மணிக்கு மேல் யாரும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்க கூடாது, மதுபானக்கடையில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கட்டிங் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு, அதிலும் வெளியூர்க்காரர்கள் என்றால் அந்த கட்டிங்கில் கூட போதை ஏறாத மதுவாக கொடுப்பது என ஊர் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும் இப்படி இருந்தால்… வேண்டாம் அது பேராசை.. அட்லீஸ்ட் இப்படி ஒரு ஊராவது தமிழ்நாட்டில் இருந்து விடாதா என்கிற ஆதங்கம் ஏற்படுகிறது.

பிளாஷ்பேக்கில் வந்தாலும் ஊர் மக்களை திருத்தி நல்வழிப்படுத்தும் ஹீரோவாக மனதில் பதிகிறார் ஹரிகுமார். மற்றும் அரசியல்வாதி ராதாரவி, நண்பன் அருள்தாஸ், கிராமத்திற்கே மேனேஜர் போல திகழும் ரவி மரியா, இளம் காதலர்கள் ரோஷன் பஷீர், ஆஷிகா அசோகன், கவுசல்யா என எல்லா கதாபாத்திரங்களுமே ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த படம் கமர்சியலாக வெற்றி பெறுமா என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு நல்ல கருத்தை சொன்னதற்காக, சமுதாய மாற்றத்திற்கு தேவைப்படும் விதையை விதைத்ததற்காக நிச்சயமாக இந்த படத்தின் இயக்குனர் ஜேவிஆர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்ஜேஎஸ் சுந்தரத்தையும் தாராளமாக பாராட்ட வேண்டும்.