வெப் ; விமர்சனம்


ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷில்பா மஞ்சுநாத் சுபப்பிரியா, சாஸ்வி பாலா ஆடியோ திறமைசாலிகள். அதே சமயம் வார இறுதி நாட்களில் பார்ட்டி, சரக்கு, போதை, கொண்டாட்டம் என உற்சாகமாக கழிப்பவர்கள். ஒரு நாள் அப்படி ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு போதையுடன் காரில் கிளம்புகிறார்கள். எதிர்பாராமல் நடிகர் நட்டியால் கடத்தப்பட்டு ஆள் அரவம் இல்லாத ஒரு பழைய வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

தாங்கள் எதற்காக கடத்தி வைக்கப்பட்டுள்ளோம் என ஆரம்பத்தில் புரியாமல் அலறினாலும் பின்னர் மாற்றுத்திறனாளியான நட்டியை தாக்கி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது. இதற்கிடையே அவர்களுடன் சிக்கிய அப்பாவி பெண்ணும் எதிர்பாராத விதமாக அங்கே பலியாகிறார்.

மற்ற மூவரால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா ? அவர்களை நட்டி ஏன் அங்கே அடைத்து வைத்தார் ? இவர்களால் நட்டிக்கு ஏதேனும் அநீதி நடந்ததா ? அதற்காக பழிவாங்குகிறாரா என்பதெல்லாம் மீதிக்கதை.

தான் நடிக்கும் படங்களில் எப்போதும் துருதுருவென வலம் வருபவர் நடிகர் நட்டி நடராஜ். இந்த படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் அவரது வேகத்தை குறைத்து இருக்கிறார்கள்.. அதேசமயம் இது ஒரு சமூக பொறுப்புள்ள கதை என்பதால் அதன் தேவை உணர்ந்து அண்டர் பிளே செய்து நடித்துள்ளார் நட்டி.

இறுதிக்காட்சியின் அவரைப் பற்றிய உண்மை தெரியவரும்போது நாம் யூகிக்க முடியாத ஒரு விஷயமாகவும் அது நமக்கு அதிர்ச்சி கொடுப்பதாகவும் இருக்கிறது.

துடுக்கும் கோபமும் நிறைந்த மாடர்ன் கேர்ள் கதாபாத்திரத்தில் ஷில்பா மஞ்சுநாத். வேலையில் மேலாளரிடம் சவால் விட்டு கெத்து காட்டுவதும், தாங்கள் அனைவரும் கடத்தப்பட்டு கட்டிப்போடப்பட்ட நிலையில் தப்பித்துப் போவதற்காக தன்னால் இயன்ற அளவுக்கு பலமுறை முயற்சிப்பதும் என இன்றைய துணிச்சல் பெண்களின் மறு உருவமாக காட்சியளிக்கிறார்.

அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சுபப்பிரியா மலர் மற்றும் சாஸ்வி பாலா ஆகியோரும் கடத்தப்பட்ட பெண்களின் மனநிலையை அழகாக பிரதிபலித்துள்ளார்கள். படத்தில் இன்னும் சில கதாபாத்திரங்கள் இருந்தாலும் இவர்களை மையப்படுத்தியே படம் சுழல்கிறது. நட்டியின் பாடிகாட் பெண்ணாக நடித்திருப்பவரும் கவனம் ஈர்க்கிறார்.

குறுகிய இடத்திற்குள்ளேயே நடக்கும் கதையை தனது தொய்வில்லாத ஒளிப்பதிவால் போரடிக்காமல் நகர்த்த உதவி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப். கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் தொடர் திகில் காட்சிகளுக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் ஹாரூன் தனது அறிமுகப்படத்திலேயே ஒரு சமூக பொறுப்புள்ள விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டதற்காக முதலில் அவருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த விஷயத்தை சொல்வதற்காக முக்கால்வாசி படம் முழுவதையும் இப்படித்தான் நடத்தி இருக்க வேண்டுமா என்கிற எண்ணமும் ஏற்பட்டாலும் கிளைமாக்ஸில் உண்மை தெரியும்போது இதைத்தான் செய்திருக்க முடியும் என்று நமக்கு நாமே லாஜிக்கை சரி செய்து கொள்ளவும் வைத்திருக்கிறார் இயக்குனர் ஹாரூன்.

ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாடர்ன் பெண்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவுரையை சற்று இனிப்பு கலந்த கசப்பு மருந்தாகவே கொடுத்துள்ளார் இயக்குனர் ஹாரூன்.