சிங்கப்பெண்ணே ; விமர்சனம்


அதிகாரம் கொண்டவர்களை எதிர்த்துப் போராடும் ஒரு சாமானியனின் கதை தான் இந்த சிங்கப் பெண்ணே..

நீச்சல் வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தால் அது முடியாமல் போகிறது. அதனால், சென்னையில் நீச்சல் பயிர்சியாளராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே அவர் தனது சொந்த ஊரான தென்காசிக்கு பெற்றோரை சந்திக்க செல்கிறார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி, நீச்சல், வேகமாக சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓடுவது என்று அனைத்திலும் திறமையானவராக இருக்கிறார்.

இதற்கிடையே, பெற்றோர் இல்லாத ஆர்த்திக்கு ஆதரவாக இருந்த அவரது பாட்டி காலமாகி விடுகிறார். இதனால், ஆர்த்தியை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லும் ஷில்பா மஞ்சுநாத், அவருக்கு முறையாக நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டப்பந்தய பயிற்சியை அளித்து அவரை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த முடிவு செய்கிறார். அதன்படி, பயிற்சியில் ஈடுபடும் ஆர்த்தி, மாவட்ட கலெக்டரின் மகளை விட அதிவேகமாக ஓடுவதோடு, தேசிய அளவிலான சாதனை நேரத்தை எளிதில் கடந்து விடுகிறார்.

பயிற்சியின் போதே இப்படி இருப்பவர், போட்டியில் கலந்துக்கொண்டால் தனது மகள் நிச்சயம் பின்னுக்கு தள்ளப்படுவார் என்று நினைக்கும் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சியை முறியடித்து ஆர்த்தியை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க போராடும் ஷில்பா மஞ்சுநாத், அதில் வெற்றி பெற்றாரா?, அவர் நினைத்தது போல் ஆர்த்தியை விளையாட்டுத்துறையில் சாதனையாளராக மாற்றினாரா? என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

நீச்சல் பயிற்சியாளர் ஷாலினியாக ஷில்பா மஞ்சுநாத்.. அவரது நடிப்பும் இளமை துடிப்பும் நிச்சயம் நம்மை ஈர்க்கும்.. தன் கேரக்டர் மூலம் சிலிர்க்க வைக்கிறார் ஷில்பா.

தேன்மொழியாக ஆர்த்தி. அவரது முகத் தோற்றம் முகத்தில் கூட உயிரோட்டம் தருகிறது… நீச்சலில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் நீச்சல் உடை அணியும் போதும் அவர் முகத்தில் வெட்கம்.. அவமானங்களால் ஏற்பட்ட வேதனை என அனைத்தையும் நன்றாகவே பிரதிபலிக்கிறார்.. இவர் நிஜ வாழ்க்கையிலும் நீச்சலில் சாதித்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது..

ஐ.ஏ.எஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் பிரேம், பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் தீபக் நம்பியார், பசங்க சிவகுமார், ஷில்பா மஞ்சுநாத்தின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கட்கேஷ், ஆர்த்தியின் முறை மாமனாக நடித்திருக்கும் செண்ட்ராயன் என அனைவரும் கதாபாத்திரத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

நிஜ டிரையத்லான் காட்சிகளைப் படம் பிடித்து, அதில் இருந்து தேவையான காட்சிகளை தொகுத்து எடுத்து தேர்ந்தெடுத்து அதற்கேற்ப குளோசப்களை எடுத்து அதற்கேற்ப சில வசனங்களை எழுதி .. இப்படி ஒரு ஃபார்மட்டில் படம் எடுத்து இருக்கிறார்கள் . ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

டிரம்ஸ் சிவமணியின் வாரிசான குமரேசன் சிவமணி தான் இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணை.

கதை திரைக்கதை என்று பார்த்தால் பலமுறை பார்த்துச் சலித்த படங்களின் வழக்கமான வடிவத்தில் படம் துவங்கி முடிவதால் , புதிதாக ஒன்றும் இல்லை . அதுதான் பெரிய பலவீனம் . எனினும் ஸ்போர்ட்ஸ் பிடித்தவர்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கு குரல் கொடுப்பவர்கள் , சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் இந்தப் படத்தை ரசிக்கலாம்