பிரேமலு ; விமர்சனம்

சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் மலையாள படங்கள் கோடிக்கணக்கில் வசூலை வாரி குவிக்கின்றன. அப்படி கேரளாவையும் தாண்டி தெலுங்கிலும் கொடி கட்டி பறந்து, தற்போது தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘பிரேமாலு’. இயக்குனர் ராஜமவுளியே ஆஹா ஓஹோவென புகழும் அளவுக்கு அப்படி என்னதான் விசேஷம் இந்தப்படத்தில்…?

நாயகன் நஸ்லென் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல் தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். அதுவும் தோல்வியில் முடிகிறது. இதனால், தனது நண்பருடன் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண நிகழ்வில் நாயகி மமீதா பைஜுவை சந்திக்க அவர் மீதும் நஸ்லெனுக்கு காதல் பிறக்கிறது. அதனால் சென்னைக்கு போக நினைத்த நாயகன், காதலுக்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார்.

தனது காதலை நாயகியின் தோழியிடம் நஸ்லென் தெரிவிக்க, அவரோ ”மமீதா பைஜு எதிர்ப்பார்க்கும் எந்த தகுதியும் உன்னிடம் இல்லை, அதனால் உன் காதலை அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்”, என்பதோடு, அலுவலக நண்பரான ஷ்யாம் மோகனும், மமீதாவும் உறவில் இருப்பதாகவும் சொல்கிறார். இதனை கேட்ட பிறகும் மமீதா பைஜு மீது காதல் கொண்டு அவருடன் பயணிக்கும் நஸ்லெனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்வது தான் ‘பிரேமலு’.

யதார்த்த நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நாயகன் நஸ்லென். கண்டதும் காதல், காதலுக்காக உருகுவது, காதல் தோல்வியால் வாடுவது என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் மமிதா பைஜு, நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.

அதேசமயம் இத்திரைப்படத்தில் மது அருந்தாத ஆதி (ஷியாம் மோகன்) எனும் கதாபாத்திரத்தை வில்லனாக காட்டியிருப்பதை தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் அமல் டேவிஸ் (சங்கீத் பிரதாப்) அடிக்கும் ஒன் லைன் பஞ்ச் செம. தாமஸ் கேரக்டரில் நடித்திருக்கும் மேத்யூ தாமஸின் நடிப்பும் தனி சிறப்பு.

உயிரோட்டமும் உணர்வுகளின் போராட்டமுமாய் கடந்தோடும் காட்சிகளை அதன் தன்மை மாறாமல் தாங்கிப் பிடித்திருக்கிறது விஷ்ணு விஜயனின் பின்னணி இசை. பாடல்கள் இரண்டும் இதம் தருகிறது. கூடவே ஒளிப்பதிவின் கோணங்களுக்கும் தரத்துக்கும் தனி பாராட்டு.

சாதாரண காதல் கதையை ரசிகர்கள் விரும்பும் வகையில் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.. திருப்பங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக கதையை நகர்த்தி சென்றாலும், இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ஒரு கலர்புல்லான யூத் படம் இந்த ‘பிரேமலு’.