இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் பயணத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம் துரிதம்.
சென்னையில் வாடகை கார் ஓட்டும் ஜெகன், அவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் நாயகி ஈடனை ஒரு தலையாக காதலிக்கிறார். தீபாவளி நெருங்கும்போது தந்தையின் நிர்ப்பந்தத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிறார் ஈடன். கடைசியாக அவரிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற ஜெகன் முயற்சி தோல்வியில் முடிகிறது.
இந்த நிலையில் ஈடன் ரெயிலை தவற விட மதுரைக்கு புறப்படும் ஜெகனை அழைத்து அவரது பைக்கிலேயே பின்னால் உட்கார்ந்து செல்கிறார். வழியில் பைக் பழுதாகி நிற்க, அந்த வழியாக காரை ஓட்டிக்கொண்டு வரும் ராம்ஸிடம் லிப்ட் கேட்கின்றனர். அவருக்கு ஈடன் மீது சபலம் வருகிறது. காரை நிறுத்தி ஈடனை மட்டும் ஏற்றிக் கொண்டு கடத்தி விடுகிறார்.
ஈடனை ஜெகன் தேடி அலைகிறார். கண்டுபிடித்தாரா? காதல் என்ன ஆனது என்பது மீதி கதை…
அதிரடியாகவும், அன்பாகவும் அசத்தியிருக்கிறார் நாயகன் ஜெகன், ஓட்டுநர் வேடம் தானே என அலட்சியம் காட்டாமல் சிறப்பாக நடித்துள்ளார். நாயகி ஈடனுக்கு கனமான பாத்திரம், அற்புதமாக நடித்து கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். பால சரவணன் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். சந்தேக தந்தையாக வரும் வெங்கடேஷ் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரெயிலில் வருவதாக பொய் சொல்லி விட்டு பைக்கில் பயணப்படும் ஈடன் வெங்கடேஷிடம் சிக்கி விடுவாரோ என்ற படப்படப்பை ஏற்படுத்தும் பிற்பகுதி திரைக்கதை பலம்.
வாசன் மற்றும் அன்பு பைபாஸ் சாலை பயண காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். நரேஷின் பின்னணி இசை கதையோடும் நம்மை ஒன்றி போக வைக்கிறது.
பயணத்தை கதைக்களமாக வைத்து ஒரு காதல் கதையை அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர் வெங்கடேசன்.