வீரன் ; விமர்சனம்

மரகத நாணயம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள படம் வீரன்.

வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன் ( ஹிப் ஹாப் ஆதி )தனது சிறு வயதில் மின்னலால் திடீரென தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கினர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

இதனால், வீரனூரில் இருந்து தனது தம்பியை சிங்கப்பூருக்கு ஆதியின் அக்கா அழைத்து சென்று விடுகிறார். சிங்கப்பூருக்கு செல்லும் ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வரும் ஆதி தனது சிறு வயது நண்பர்களை சந்தித்து ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இந்த சமயத்தில் வில்லன் வினய் தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரியவருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை சூப்பர் ஹீரோவாக மாறி எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..

பொதுவாக ஹாலிவுட் சினிமாவில் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும். அவென்ஜர்ஸ், ஜஸ்டிஸ் லீக், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த கான்சப்ட் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம்.

அப்படி தமிழில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது, சரவணன் இயக்கியிருக்கும் வீரன் படம் சூப்பர் ஹீரோ ஃபேன்டஸி உலகத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது. பிற சூப்பர் ஹீரோ படங்களில் தங்களுக்கு ஸ்பெஷல் சக்தி இருப்பதை ஹீரோக்கள் உணர நேரம் எடுக்கும். ஆனால் வீரனில் அப்படி இல்லை. தனக்கு வரும் கனவு மூலம் தான் சாதாரண ஆள் இல்லை என்பது குமரனுக்கு ஆரம்பத்திலேயே தெரிகிறது. கதையை படமாக்கிய விதம் நன்றாக இருக்கிறது.

சூப்பர் ஹீரோவாக நம்பும்படி நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. நாயகியாக ஆதிரா ராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சக்திவாய்ந்த வில்லனாக வினய் மிரட்டுகிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது. தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள், மின்னல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை தாராளமாக வீரன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.