2018 ; விமர்சனம்

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்தாலும் எந்த ஒரு நடிகரும் தனிப்பட்ட ஹீரோ இல்லை என்கிற பொருளில் “ஒவ்வொருவரும் ஹீரோதான்…” என்று சொல்லியே இந்த படத்தைத் தொடங்குகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

2018 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அத்தனை சீக்கிரம் மறப்பதற்கு இயலாது. செய்திகளாகவும், செய்திப் படங்களாகவும் நாம் அறிந்திருந்த அந்த சோகத்தை ஒரு திரைக்கதையாக்கி நம்மை உணரச் செய்திருக்கிறார் இயக்குனர்.

உயிர் பயத்தில் ராணுவத்தில் இருந்து ஊருக்குத் திரும்பும் அனூப் (டோவினோ தாமஸ்), டீச்சர் மஞ்சுவைக் (தன்வி ராம்) காதலிக்கிறார். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார்கள் மத்தானும் (லால்), அவர் மகன் வின்ஸ்டனும் (நரேன்).

அந்தத் தொழிலை வெறுத்து மாடலிங் ஆசையில் இருக்கிறார் இன்னொரு மகன் நிக் ஷன் (ஆசிப் அலி). குடும்பத்தை விட்டு மக்களைக் காக்கும் அரசு பணியில் இருக்கிறார் ஷாஜி (குஞ்சாக்கோ போபன்), தமிழ்நாட்டில் இருந்து வரும் லாரி டிரைவர் சேதுபதி (கலையரசன்), சேனல் செய்தியாளர் நூரா (அபர்ணா பாலமுரளி), வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் கோஷி (அஜு வர்க்கீஸ்).. இவர்களும் இன்னும் சில முரண்பட்ட கேரக்டர்களும் கேரளாவைப் புரட்டிப் போட்ட பேய் மழை நாட்களில், எப்படி ஒன்று கூடி எதிர்பாராத ஹீரோக்களானார்கள் என்பதுதான் கதை.

மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில், டப் செய்து இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கேரளாவை உலுக்கி எடுத்தது பேய் மழை. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளத்தில் தத்தளித்தது மாநிலம். நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வு என கொடும் நிகழ்வு அது.

அந்த நிஜ சம்பவத்துக்கு உயிரும் உணர்வும் கொடுத்து எமோஷனலான ஒரு படத்தை, இப்படி தந்ததற்காகவே, இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் உள்ளிட்ட படக்குழுவைப் பாராட்டலாம். மனிதர்களிடையே எத்தனை பிரிவினை இருந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஆபத்து என்று வந்து விடும்போது மனிதம் எப்படி புனிதப்பட்டு நிற்கிறது என்பதுதான் இந்த படத்தில் இயக்குனர் சொல்லியிருக்கும் செய்தி.

எக்ஸ் மிலிட்டரி மேனாக டொவினோ தாமஸ் , ஸ்கூல் டீச்சராக தன்வி ராம் , வழக்கம் போல் மலையாளிகளுக்கு எதிரான எண்ணம் கொண்டவராக ஒரு தமிழக லாரி டிரைவர் ரோலில் கலையரசன் , போராடும் மாடலாக ஆசிப் அலி மற்றும் அவரது அண்ணனாக நரேன் , அப்பாவாக லால் , டைவோர்ஸ் வாங்கிக் கொண்டு ஃபாரினில் செட்டிலான வினீத் ஸ்ரீனிவாசன் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பினை பக்காவாக வழங்கி இருக்கிறார்கள். நியூஸ் ரிப்போர்ட்டராக அபர்ணா பாலமுரளி மற்றும் ஹெல்ப் லைன் கண்காணிப்பாளாராக குஞ்சாகோ போபன் என அனைவரின் நடிப்புமே சிறப்பாக உள்ளது.

அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக வெள்ளக் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப கலை இயக்கமும், சிஜியும் கச்சிதமாக பிணைந்திருக்கிறது. நோபின் பால் இசையில் பல காட்சிகள் எமோஷனலாக நம்மை தொடுகிறது.

லாஜிக்கில் சில பல ஓட்டைகள் இருந்தாலும் அதையெல்லாம் கவனிக்க விடாத பரபரப்பான எடிட்டிங்கிலும் உணர்ச்சிமயமான காட்சிகளிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார் இயக்குனர்.

2018 கேரளா வெள்ளத்துக்காக தமிழ்நாட்டிலிருந்து தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு போய் காப்பாற்றிய தமிழக மீனவர்களைப் பற்றிய எந்த குறிப்போ, செய்திகளோ படத்தில் இல்லை. அத்துடன் தமிழர்களை வன்மத்துடனேயே அணுகும் கேரள சினிமாவின் போக்கின்படியே இதிலும் தமிழரான கலையரசன் ஒரு சதி வேலைக்காக கேரளாவுக்குள் நுழைந்து அங்கே மனம் திருந்தி நல்லவராகிறாராம்.

மொத்தத்தில் இது ஒரு பிரமிப்பான வாழ்வியல் அனுபவம்