வான் மூன்று ; விமர்சனம்

வயதில் மூத்த, இளைய என மூன்று விதமான ஜோடி.. மூவருக்கும் மூன்று விதமான பிரச்சனை.. இந்த மூன்றையும் ஒரே புள்ளியில் இணைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏஎம்ஆர் முருகேஷ். இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் அதிக நேரம் செலவிடும் நாம் நம்முடன் இருக்கும் சக மனிதர்களுடன் அந்த நேரத்தை செலவழித்தால் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்கள் நிகழும் என்பதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்.

வயதான டெல்லி கணேஷ், லீலா சாம்சன் தம்பதி, வயிற்றில் குழந்தையிருக்கும் நிலையில் தான் ஆசைப்பட்டு காதலித்துத் திருமணம் செய்த அபிராமி வெங்கடாச்சலத்தை மூளை கட்டி நோய்க்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் காதல் கணவரான வினோத் கிஷன், காதலன் தன்னை கைவிட்டு விட்டான் என நினைத்து தற்கொலைக்கு முயன்றி மருத்துவமனையில் சேர்க்கப்படும் அம்மு அபிராமி, காதலித்த பெண் ஏமாற்றி விட்டால் என இதே போல முடிவெடுத்து உயிரை காப்பாற்ற மருத்துவமனையில்யை சேர்க்கப்படும் ஆதித்யா, இந்த மூன்று ஜோடிகளும் மருத்துவமனையில் சந்திக்கும் விதமாக வெவ்வேறு பிரச்சனைகள் இங்கே இந்த மூன்று ஜோடிகளும் பகிர்ந்து கொள்ளும் தங்களின் கதை தான் மொத்த படமாக நகர்கிறது.

இதில் நம்மை வெகுவாக கவர்வது டெல்லி கணேஷ் மற்றும் லீலா சாம்சன் தம்பதி தான். அந்த அளவிற்கு அவர்கள் நடிப்பில் இழையோடும் அன்பும் பாசமும் உயிரோட்டமாக இருக்கிறது, குறிப்பாக தனது மனைவிக்கு ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படும் நிலையில் செய்வது அறியாது திகைத்து நிற்கும் டெல்லி கணேஷ் இன்றைய சமூகத்தின் விளிம்பு நிலை மனிதரை பிரதிபலிக்கிறார். லீலா சாம்சன் நம் வீட்டில் இருக்கும் பாட்டியை நமக்கு நினைவூட்டல் செய்கிறார்.

அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் என ஒவ்வொருவருமே தங்களது கதாபாத்திரத்திற்கு நாங்கள் சரியான தேர்வு தான் என பல காட்சிகளில் நிரூபிக்கிறார்கள்,

ஆர்-2 பிரதர்ஸின் இசையில் பாடல்கள் அந்த நேரத்திய உணர்வுகளை நமக்குக் கொடுக்கின்றன. பின்னணி இசை கதை, திரைக்கதைக்கு, நடிகர்களின் நடிப்புக்கு, முக்கியமாக ‘காதல்’ என்ற உணர்வுக்கு உயிர் கொடுப்பதைபோல் அமைந்துள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனையில் நடைபெறுவது போல இருந்தாலும் அதில் ஓரளவு போர் அடிக்காமலேயே சாமர்த்தியமாக கதையை நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் ஏ எம் ஆர் முருகேஷ். இந்த மூன்று விதமான காதலிலும் ஏதோ ஒரு ஈர்ப்பை கொடுத்து நம்மை அவர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து பயணிக்க வைப்பதில் இயக்குனர் ஏ எம் ஆர் முருகேஷ் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.