50 வயதில் ஒரு பெண் கர்ப்பமானால் அவளை கேவலமாகவும், அவள் கணவனை வீரனாகவும் பார்க்கும் சமூகத்தின் எண்ணத்திற்கு எதிரான சவுக்கடி தான் இந்த படம். ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த வீட்ல விசேஷம்.
ரயில்வே டி.டி.ஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண வயதில் ஒரு மகனும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் சத்யராஜின் அம்மா கே.பி.ஏ.சி. லலிதாவும் வாழ்கிறார். இந்தநிலையில், திடீரென ஒருநாள் ஊர்வசி கர்ப்பமாகும் செய்தி தெரியவர, சத்யராஜும் ஊர்வசியும் அதிர்ச்சியடைகின்றனர்.
இந்த செய்தியை எப்படி மகன்களிடமும், அம்மாவிடமும் சத்யராஜ் கொண்டு சேர்க்கிறார்? அதற்கு அவர்களின் ரியாக்ஷன் என்ன ? இதை சமூகம் எப்படி அணுகுகிறது என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்து எமோஷனலான படமாக கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர் என்.ஜே.சரவணனும் ஆர்.ஜே.பாலாஜியும்.
ஆர்.ஜே.பாலாஜி வழக்கம்போல் காமெடி காட்சிகளில் அசத்தியிருக்கிறார். சத்யராஜ், ஊர்வசி மற்றும் சத்யராஜின் அம்மாவாக நடித்துள்ள கே.பி.ஏ.சி. லலிதா இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மாடர்ன் என்பது போடுற ஜீனில் இல்லை என்றும் மனதளவில் மாறினால் மட்டுமே அது மாடர்ன் சொசைட்டி என ஆர்ஜே பாலாஜிக்கு அழகாக புரிய வைக்கும் அபர்ணா பாலமுரளியின் காட்சி கதைக்கு வலு சேர்த்துள்ளது.
ஊர்வசி நடிப்பில் மிரட்டுகிறார். பிரசவ காட்சிகளில் அவர் பேசும் வசனம், கர்ப்பமானதால் சங்கடமான சூழல்களை எதிர்கொள்வது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஒரிஜினலான பதாய் ஹோ படம் பார்க்காதவர்களுக்கு இந்த படம் முழு திருப்தியை கொடுக்கும்.
கார்த்திக் முத்துகுமாரன் ஒளிப்பதிவில் கதைக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கிறார். க்ரீஷ் கோபாலாகிருஷ்ணனின் இசையில் க்ளைமாக்ஸ் பாடல் எமோஷனல் கனெக்ட்.
மொத்தத்தில் குடும்பத்தோடு இந்த வீட்ல விசேஷம் படத்தை பார்க்கலாம்.