ஒயிட் ரோஸ் ; விமர்சனம்


விஜித், கயல் ஆனந்தி தம்பதியினரான இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை. போலீஸ் என்கவுன்டரில் எதேச்சையாக சிக்கி உயிரை உயிரை விடுகிறார், ஆனந்தியின் கணவர் விஜித். கணவரை இழந்த அவருக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படவே, தோழியின் உதவியோடு பாலியல் தொழிலாளியாக மாறுகிறார். பாலியல் தொழிலின் முதல் நாள், பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் ஆர்கே சுரேஷிடம், கயல் ஆனந்தி மாட்டிக்கொள்கிறார். அவரிடமிருந்து ஆனந்தி தப்பித்தாரா, இல்லையா? என்பதே ஒயிட் ரோஸ்.

நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி அப்பாவியான முகத்தோடு அமைதியாக வலம் வந்தாலும், கொலையாளியிடம் இருந்து தப்பிக்க எடுக்க முயற்சிகளில் மிரட்சி நிறைந்த நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சைக்கோ கொலையாளி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.அவருக்கு வசனங்களே இல்லை என்பது ஆறுதலான கூடுதல் தகவல்

இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணி, கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன்,காவல்துறை ஆய்வாளரக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி ஆகியோரும் குறைவில்லை.

ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவும், இசையமைப்பாளர் சுதர்சனும் தங்கள் பணி மூலம் ரசிகர்களிடத்தில் பயத்தை கடத்த பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

சிகப்பு ரோஜாக்களை வெள்ளை ரோஜாவாக்கி அதறகுப் பொருத்தமாக கயல் ஆனந்தியைக் கதாநாயகியாகத் தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் கே.ராஜசேகர். அதேசமயம் படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காட்சிகளை வேகமாக கடத்தி செல்லும் இயக்குநர் அதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியுள்ளார்.