“வெளியே நில்லு” ; இயக்குனரிடம் சென்சார் அதிகாரி காட்டிய அநாகரிகம்..!


மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’.

திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.

இந்தப்படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.. இந்தப்படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.. நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார் இயக்குனர் தியா. படத்தை பார்த்த தணிக்கை குழு முதன்மை அதிகாரி மதியழகன் இந்தப்படத்தில் ஆட்சேபகரமான சில விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுக்கமுடியும் என கறாராக கூறியுள்ளார்.

பின்னர் அது குறித்த விளக்கம் கேட்ட இயக்குனரிடம் சில குறிப்பிட்ட வசனங்களையும் சில காட்சிகளையும், ஒரு பாடலையும் நீக்கும்படி. கூறியுள்ளார். இத்தனைக்கும் வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த திணிப்பும் இல்லாமல் தான் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தியா..

ஆனாலும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் முக்கியம் என்பதாலும், அதுதான் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளரை தேவையில்லாத நட்டத்தில் இருந்து காப்பாற்றும் என்பதாலும் சென்சார் அதிகாரி சொன்ன மாற்றங்களை செய்துள்ளார்.. ஆனாலும் சில இடங்களில் அவர் குறிப்பிட்ட காட்சிகளை, வசனங்களை நீக்கினால் கதையின் தன்மையே மொத்தமாக சிதைந்துவிடும் என விளக்கமும் கூறியுள்ளார் இயக்குனர் தியா. இவ்வளவு செய்தும் கூட ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தரமுடியும் என பிடிவாதம் காட்டியுள்ளார் தணிக்கை அதிகாரி மதியழகன்.

இதனால் அதிர்ச்சியடைந்த தியா, சமீபத்தில் வெளியான ஆபாசமான காட்சிகள், வசனங்கள் நிறைந்த, ஒரு படத்திற்கு எந்த அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதனால் கோபமான அந்த அதிகாரி, மற்ற படங்களை பற்றி பேச உங்களுக்கு அதிகாரமில்லை என கூறியுள்ளார்.. மேலும் உங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக ரிவைசிங் கமிட்டிக்கு செல்லுங்கள் என தெனாவெட்டாகவும் கூறியுள்ளார்.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படம் பார்த்தீர்களா..? அதற்கு எப்படி ‘யு’ சான்றிதழ் கொடுத்தோம் தெரியுமா என அவரே இன்னொரு படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.

இப்போது மட்டும் இன்னொரு படம் குறித்து நீங்கள் எப்படி பேசலாம் என இயக்குனர் தியா கேட்டதும் டென்சன் ஆன தணிக்கை அதிகாரி, அருகில் இருந்த தயாரிப்பாளரிடம், இந்தப்படத்தின் ரைட்ஸ் ஏதாவது இயக்குனரிடம் கொடுத்திருக்கிறீர்களா என கேட்டிருக்கிறார்..

அதற்கு ‘இல்லை’ என தயாரிப்பளார் பதில் சொன்னதும், இயக்குனர் தியாவை தனது அறையைவிட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் தனியாக நீண்ட நேரம் பேசியுள்ளார். ஒரு படத்தின் தணிக்கை விபரங்கள் குறித்து பகிர்ந்துகொள்ள முதன்மையான ஆள் படத்தின் இயக்குனர் தான் என்பதை மறந்து, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசியுள்ளார் என்றே தெரிகிறது.

ஒரு படத்தின் இயக்குனரை வெளியே போ என சொல்லிவிட்டு, தயாரிப்பாளருடன் தனியாக் பேசும் உரிமை தணிக்கை அதிகாரிக்கு இருக்கிறதா..? என அதிர்ச்சியடைந்த இயக்குனர் தியா, ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி தயாரிப்பாளருக்கு இன்னும் செலவு வைக்க விரும்பவில்லை. அதேசமயம் தணிக்கை அதிகாரியின் பேரத்துக்கு படிந்து பணம் கொடுத்து படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்கவும் விரும்பவில்லை..

வரும் டிச-9ஆம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில், தணிக்கை அதிகாரியின் இந்த செயலால், அதிர்ச்சியடைந்துள்ள இயக்குனர் தியா, சட்டபூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்.