“லவ் பேர்டாக மாறுங்கள்.. தமிழ் ராக்கர்ஸை நண்பனாக்குங்கள்..” ; விஷாலுக்கு சீனியர் இயக்குனர் கோரிக்கை..!


தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பாருங்கள் என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், விஷால், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புத்திரை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பாருங்கள் என நடிகர் விஷாலுக்கு வேண்டுகோள் வைத்தார்.

“முன்னாடியெல்லாம் படம் நல்லா இல்லையென்றால் மட்டும்தான் தயாரிப்பாளர் நஷ்டம் அடைவார். ஆனால் இன்று படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் தயாரிப்பாளர் சம்பாதிக்க முடியாத நிலையுள்ளது. சினிமா மூலம் பலரும் சம்பாதிக்கின்றனர்.

இன்று படம் பார்க்கும் மக்களில் 30 சதவீத மக்கள்தான் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் ஆன்லைன், திருட்டு டிவிடி மூலம்தான் பார்க்கிறார்கள். ஆன்லைன் பைரசி என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே இன்டர்நெட் சேவையை பல நிறுவனங்களுக்கு பிரித்து தருவதே மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம்தான். அப்படியானால் ஒரு திருட்டுபொருளை பார்ப்பதற்கு அரசாங்கமே வழிவகை செய்து தருவது எவ்வளவு பெரிய குற்றம்” என்றார்.

எப்படி கள்ள சாரயத்தை ஒழிக்க அரசே சாராயத்தை விற்கிறதோ, அதேபோல் சினிமாத் துறை தமிழ் ராக்கர்ஸை விரோதியாகப் பார்க்காமல் அவனை நண்பனாக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி தயாரிப்பாளர்களுக்கு பணம் ஈட்டி தர முடியும் என்பதை பார்க்க வேண்டும். மக்களுக்கு இன்று எல்லாமே ஹோம் டெலிவரியாக வருகிறது அதேபோல் சினிமாவும் மக்களை சென்றடைய செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்

மேலும் அவர் கூறுகையில் விஷால் இன்னும் ஆங்ரி பேர்டாகவே இருக்கிறார். லவ் பேர்டாக மாறவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறிய ஆர்.கே.செல்வமணி, விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போன்று இருந்தது. விஷால் ஒரு மிகச் சிறந்த மனிதர் என்று கூறினார்.