சமீபத்தில் நடைபெற்ற குரங்கு பொம்மை’ பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உண்மையான முகம் இதுதான் என போட்டு உடைத்துள்ளார் விதார்த்.. இவர் இதை சொல்ல வேண்டிய காரணம், குரங்கு பொம்மை படத்தில் விதார்த்துடன் பாரதிராஜாவும் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பாரதிராஜாவின் புதிய படத்தில் விதார்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரி பாரதிராஜா பற்றி என்ன சொன்னார் விதார்த்..?
“பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம், சம்பளம் தரமாட்டார், திட்டுவார், அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா அவர்கள் என்னிடம் கதை சொன்னதும் உனக்கு இவ்வளவு இலட்சங்கள் சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையை சொன்னார். நானும் சரி என்றேன். அவர் என்ன தொகை சொன்னாரோ, அதே அளவு தொகை ஒரு கடன்காரருக்கு நான் உடனடியாக கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் அப்போது இருந்தேன்.
பாரதிராஜா சார் என்னை அழைத்து கதை சொன்னதும், எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காக கொடுத்தார். சம்பளமாக சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் சம்பளமாக பேசிய முழுத்தொகையையும் ஒரே செக்’காக கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை.
உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பிகொடுத்து அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன். அதே மாதிரி அவ்வளவு அழகாக அன்பாக நடிக்கச் சொல்லிகொடுத்தார். அந்தபடம் வந்ததும் என் வளர்ச்சி அடுத்த லெவலுக்கு கண்டிப்பாக போகும்” என்று கூறியிருக்கிறார் விதார்த்.. அடடே.. பாரதிராஜா இம்புட்டு நல்லவரா..?