என்னங்கடா உங்க சட்டம்..? ; புரோக்கர் ஆன சென்சார் அதிகாரி


சினிமாக்காரர்களுக்கு சென்சார் சர்டிபிகேட் கிடைக்கும் இடம் மகப்பேறு மருத்துவமனை மாதிரி.. சுகப்பிரசவமா இல்லை சிசேரியன் பண்ணித்தான் ஆகணுமா என்பதை அங்குள்ள அதிகாரிகள் தான் முடிவ்வு செய்வார்கள். அப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் நடிப்பில் வெளியான மெட்ரோ திரைப்படம், கடுமையான தணிக்கைப் பிரச்சினையில் சிக்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

நகரில் நடக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்களை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு கடும் போராட்டத்திற்கு பிறகு தணிக்கை குழுவில் ஏ சான்று கிடைத்தது. படத்திற்கு தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தற்போது வரை தொலைக்காட்சி தணிக்கை கிடைக்கவில்லை.

நிற்க.. இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.. தற்போது லட்சுமி ராய், பாலிவுட்டில் நடித்துள்ள ஜூல-2 என்கிற படம் வெளியாக உள்ளது. லட்சுமிராயின் செக்சியான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. போஸ்டரே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டியதில்லை.

இந்தப்படத்தை பஹ்லஜ் நிஹலானி என்பவர் வெளியிட உள்ளார். ஜூலி 2 போஸ்டரை இவரை கன்னாபின்னாவென விமர்சித்திருக்கிறார் மெட்ரோ இயக்குனர் அனந்த கிருஷ்ணன்.. பின்னே இந்த பஹ்லஜ் நிஹலானி தானே மாஜி தணிக்கை குழு தலைவராக இருந்தவர்.

மாநில தணிக்கைத்துறை அதிகாரி மதியழகன், மெட்ரோ படத்துக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான தணிக்கை வழங்க மறுத்ததால் (முதலில் இவர் தியேட்டரில் வெளியிடுவதற்கான தணிக்கையையும் மறுத்தார்) முன்னாள் தணிக்கைத் துறை அதிகாரி பஹ்லஜ் நிஹலானிக்கு பல முறை அனந்த கிருஷ்ணன் கடிதம் எழுதினாராம் ஆனால் நிஹலானியோ, மற்ற எந்த அதிகாரிகளோ அவரது கேள்விக்கு பதில் தரவில்லை.

ஆனால் தற்போது அதே நிஹலானி, திரைப்பட வியாபரத்துக்கு வந்துவிட்டார். ஒரு விநியோகஸ்தராக, இந்தப்படத்தை தணிக்கை செய்து, வெளியிடும், நிஹலானி, என்னுடைய படத்தை தொலைக்காட்சியில் வெளியிட மறுப்பது ஏன் என சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் அனந்த் கிருஷ்ணன்.