குருவே வியந்த சிஷ்யன்! பெரியார் விருது பெற்ற இசையமைப்பாளர் தாஜ்நூர்!

குருவே சிஷ்யனை மனம் திறந்து பாராட்டுகிற அளவுக்கு திரையுலகத்தில் பரபரவென முன்னேறிவருகிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் சமீபத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பிரத்யேகமாக எழுதிய கவிதைகளுக்கு இசையமைத்திருந்தார். அது ‘மகரந்த மலை’ என்ற தலைப்பில் தனி இசைக் குறுந்தகடாக வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “நானே அவரது கவிதைகளுக்கு இசையமைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தாஜ்நூர் என்னை முந்திக்கொண்டார். இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று கூறியிருந்தார்.

தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் இணைந்து நடிக்கும் நையப்புடை, வெங்காயம் பட இயக்குனர் சங்ககிரி ராச்குமாரின் நெடும்பா, பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக நடிக்கும் பொம்மி வீரன், காந்தாரி, 13 ம் நம்பர் வீடு போன்ற படங்களுக்கு இசையமைத்து வரும் தாஜ்நூர், திரைப்பட இசையை தவிர ஏராளமான சமூக விழிப்புணர்ச்சியூட்டும் தனிப்பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவற்றில் பல தமிழகம் முழுக்கவிருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு மாணவர்களை நல்வழி படுத்தி வருகிறது.

திரையுலகத்தில் தாஜ்நூரின் பங்களிப்பையும், சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அவரது இசையின் பங்களிப்பையும் அறிந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அவருக்கு பெரியார் விருது அளித்து கவுரவித்திருக்கிறார். இது குறித்து தாஜ்நூர் கூறுவது என்ன?

“சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, திருமதி மோகனா வீரமணி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். “உங்கள் இசையில் உருவான குறுந்தகடுகள் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அறிந்தேன். சிறு வயதிலிருந்தே அவர்களிடம் ஒழுக்க நெறிகளை வளர்க்கும் இத்தகைய முயற்சியை நீங்கள் இலவசமாகவே செய்து வருகிறீர்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு என் பாராட்டுகள்” என்று கூறியிருந்தார். அதற்கப்புறம் ஐயா வீரமணி அவர்களும் என் பணியை கவனித்து வந்திருப்பார் என்று நினைக்கிறேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் பெரியார் விருதை வழங்கி என்னை பெருமை படுத்திவிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி” என்கிறார்.

நையப்புடை பற்றி கூறிய தாஜ்நூர், “இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்கிறார். “இந்த வயதிலும் ஒரு 22 வயது இளைஞர் போல அவர் காட்டிய சுறுசுறுப்பு என்னை ஆச்சர்யப்பட வைத்தது. இந்த படத்தில் நடிக்கிறோம். அவ்வளவுதான் என்று ஒதுங்கிவிடாமல், கம்போசிங், ரீரெக்கார்ட்டிங் சமயத்தில் கூட அவரே நேரில் வந்து ஆர்வம் காட்டியதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இப்போதும் அவரால் வெற்றியை சுலபமாக எட்ட முடிகிறது என்றால் அதற்கு அவரது உழைப்பும் ஆர்வமும்தான் காரணம்” என்றார்.

‘நெடும்பா’ பீரியட் படம் என்பதால், மிக வித்தியாசமான இசைக்கருவிகளையும் மலைவாழ் மக்களின் இசைக்கருவிகளையும் தேடி கொண்டு வந்து பயன்படுத்தியிருக்கிறாராம் தாஜ்நூர்.