உணவு டெலிவரி செய்யும் வேலை பார்ப்பவர் அர்ஜுன் தாஸ். யாருமற்ற அனாதையான அவர் நண்பர் பரணி மற்றும் அவரது நண்பர் சாரா ஆகியோருடன் தங்கியிருக்கிறார். திடீரென கோபம் ஏற்படும் போதெல்லாம் யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்பது போல தோன்றுகின்ற ஒரு மனநோயில் சிக்கித் தவிக்கிறார் அர்ஜுன் தாஸ்.
இதற்கு இடையே ஒரு பிரமாண்ட பங்களாவில் தனியாக வசிக்கும் பாட்டிக்கு துணையாக வீட்டு பணி பெண்ணாக இருக்கும் துஷாராவுடன் டெலிவரி செய்ய போகும்போது பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறுகிறது. பொறுப்பேற்ற குடும்பத்தை, தனது வருமானத்தால் தாங்கி சுமக்கிறார் துஷாரா. பணி செய்யும் வீட்டில் பாட்டியின் மகனும் மகளும் வெளிநாட்டில் இருக்க பாட்டியோ துஷாராவிடம் கண்டிப்பும் கறாருமாக நடந்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக பாட்டி மரணம் அடைய இந்த தகவலை வெளிநாட்டில் இருக்கும் அவரது மகனுக்கும் மகளுக்கும் தெரிவிக்க முடியாமல் தவிக்கிறார் துஷாரா. அவருக்கு ஆதரவாக செயல்படும் அர்ஜுன் தாஸ் மருத்துவமனையில் இருந்து பாட்டியின் உடலைப் பெற்று தனியார் குளிர் பதன அறையில் வைக்கிறார்.
இதற்கிடையே துஷார வசம் இருந்த பாட்டியின் டெபிட் கார்டில் இருந்து சில லட்சங்களை தனது தேவைக்காக திருடிக் கொள்கிறான் துஷாராவின் தம்பி.
இந்த சமயத்தில் வெளிநாட்டிலிருந்து பாட்டியின் வாரிசுகள் தொலைபேசியில் அழைக்க பாட்டி இறந்ததை தெரிவிக்காமல் சமாளிக்கிறார் துஷாரா. பணத்தை எப்படியாவது பாட்டியின் கணக்கில் செலுத்தி விட்டு தகவல் சொல்லலாம் என நினைக்கையில், எதிர்பாராத விதமாக வாரிசுகள் இருவரும் வந்து நிற்கின்றனர். இதற்கு அடுத்து என்ன நடந்தது என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.
எளிய மனிதர்களின் உணர்வுகளோடு விளையாடும் இந்த சமூகத்தை பற்றி தனது பார்வையில் இந்த கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். சொந்தம் யாருமின்றி தனித்திருக்கும் ஒரு இளைஞனின் மனநிலையை அழகாக பிரதிபலித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.. அவருக்குள் இருக்கும் கொலை செய்யும் எண்ணம் ஒரு பெண்ணின் காதலால், அன்பால் மாறுவதை அழகாக வெளிப்படுத்துகிறார். பின்னர் மீண்டும் அதேபோல ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவதையும் அது எதனால் என்பதையும் பார்க்கும்போது அவர்மீது பயம் கலந்த பரிதாபம் ஏற்படுகிறது.
நடிகை துஷாரா நாளுக்கு நான் நடிப்பில் முன்னேறி வருகிறார். காதலனின் அன்பு கிடைத்ததும் மகிழ்வது, வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர்களால் கொடுமைக்கு ஆளாவது, பொறுப்பற்ற குடும்பத்தினர் தரும் அவஸ்தைகளை சகித்துக் கொண்டு ஒரு சுமை தாங்கியாக சம்பாதிக்கும் எந்திரமாக ஓடுவது என நடிப்பின் பல பரிமாணங்களை தனது கதாபாத்திரத்தில் அழகாக பிரதிபலித்துள்ளார்.
பாட்டியின் வாரிசுகளாக வெளிநாட்டிலிருந்து வரும் வனிதா மற்றும் அர்ஜுன் சம்பத் இருவருமே தங்களது பணக்காரத் திமிரை தங்கள் கதாபாத்திரங்களில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக பாட்டி இறந்த செய்தியை கேட்ட பின்பு அவர்கள் மிருகமாக மாறுவது நமக்கே பயம் ஊட்டுகிறது.
அந்த பாட்டியும் தன் பங்கிற்கு துசாராவை மட்டுமல்ல நடிப்பால் நம்மையும் மிரட்டுகிறார். பிளாஸ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு பாசமான தந்தையாக ஒரு வெள்ளந்தி தொழிலாளியாக என நடிப்பால் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார் காளி வெங்கட்
நண்பர்களாக வரும் நாடோடிகள் பரணி இப்படி ஒரு நண்பர் எல்லோருக்கும் இருந்தால் எப்படி இருக்கும் என நினைக்க வைக்கிறார். அதேசமயம் சுயநலவாதியாக வரும் சாராவும் அந்த கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பால் உயிரூட்டி இருக்கிறார் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். எதார்த்தமான நடிப்பு அவரிடம் இயல்பாகவே வெளிப்படுகிறது. மற்றும் படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பொறுப்பை சரியாக செய்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையும் தன் பங்கிற்கு படத்தின் கனத்தை கூட்டி உள்ளது இதற்கு முன்பு பார்த்த வசந்த பாலன் படங்களிலிருந்து சற்றே மாறுபட்டு இந்த முறை கொஞ்சம் கமர்சியல் பாதையிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.
ஈரம் இல்லாத மனிதர்கள் எங்கேயும் நிறைந்து இருக்கிறார்கள் என்பதை கிராமத்து பிளாஸ் பேக்கிலும் அர்ஜுன் தாஸின் நடைமுறை வாழ்க்கையிலும் துஷாராவின் வாழ்க்கை மூலமாகவும் யார் யாருக்கு எப்படியெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறது என்று கோடிட்டு காட்டி இருக்கிறார் வசந்த பாலன். அதேசமயம் கிளைமாக்ஸ் அந்த அளவுக்கு குருரம் காட்டி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படம் பார்ப்பவர்களை ஒரு பதைபதைப்பிலேயே வைத்திருந்து கதை மாந்தர்களுடன் உலாவாரச் செய்ததில் இயக்குனர் வசந்த பாலம் வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.