கொலை ; விமர்சனம்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கொலை.

அப்பாட்மென்ட் ஒன்றில் பிரபல மாடல் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இது தொடர்பாக காவல் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள ரித்திகா சிங் விசாரணையை மேற்கொள்கிறார். ஆனால்,விசாரித்து பயன் இல்லாமல் போக துப்பறிவாளர் விஜய்ஆன்டனி பெண் மாடலின் கொலை குறித்த விசாரணையை கையில் எடுக்கிறார். பல யூகங்கள் வழியே விசாரணை நகர்கிறது. கொலை செய்தவனை கண்டுபிடித்தார்களா என்பதே மீதி கதை.

சால்ட் பெப்பர் தலைமுடியுடன், நடுத்தர வயது புலனாய்வு அதிகாரியாக விஜய் ஆண்டனி. ஆர்ப்பாட்டம் இல்லாத உடல்மொழி, நிதானமான நடை, மென்மையான வசன உச்சரிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். மகளின் நிலை கண்டு வேதனைப்படும் காட்சிகளில் தந்தையாக மாரி பரிதாபம் அள்ளுகிறார்.

இளம் போலீஸ் அதிகாரியாக விறைப்பும் மிடுக்குமாக வருகிறார் ரித்திகா சிங் முதல் வழக்கை வெற்றிகரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற மும்முரம், உயர் அதிகாரியின் திமிர் பேச்சை கேட்டு சகித்துக் கொண்டு, பொறுமையாக பதிலளித்து வழக்கி;ற்காக எடுக்கும் முயற்சிகள் என்று படம் முழுவதும் அன்டர்பிலே செய்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனாலும் லைலாவாக வந்த மீனாட்சி சவுத்ரி தான் தன் நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஒரு மாடல் அழகி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் மீனாட்சி.

மாடலிங் துறையின் தலைமை அதிகாரி ராதிகா சரத்குமார், நண்பராக, அப்பாவி முகப்பாவத்துடன், உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத முகபாவத்துடன், வியப்பில் ஆழத்தும் புது தோற்றத்தில் சித்தார்த்தா சங்கர், மாடலிங் ஏஜென்டாக முரளி சர்மா, போலீஸ் உயர் அதிகாரியாக தன் பேச்சால் எரிச்சலைடயச் செய்யும் ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம்,கிஷோர் சர்மா ஆகியோர் அவர்களுக்கேற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து படத்தின் விறுவிறுப்பிற்கு துணை புரிந்துள்ளனர்

இன்றைய டிரெண்டிங்கான ட்யூனில் நம் மனதை இசையாலும் மற்றும் காட்சிக் கோணங்களில் பின்னணி இசையாலும் கட்டிப் போட்ட ஸ்டைலிஷ் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் கோணங்களும், ஒளி அமைப்பும் ஒரு ஹாலிவுட் படத்தின் தரத்தில் இருப்பது பாராட்டத்தக்கது.

கொலை செய்யப்பட்ட பெண்ணே பார்வையாளர்களிடம் பேசுவதைப் போல ஒரு யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குநர். ஒரு மாடல் அழகி கொலையில் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறமைமிக்க போலீஸ் கதைக்களத்தில் மர்மத்தை தக்கவைத்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார் இயக்குனர் பாலாஜி கே.குமார் நல்ல விஷுவல்ஸுடன் கூடிய கொலை த்ரில்லர் படம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற படம் கொலை.