பௌவ் பௌவ் – விமர்சனம்


தனது பெற்றோரை விபத்தில் இழந்த சிறுவன் மாஸ்டர் அஹான் தனது தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான். சிறுவன் வாழும் வீட்டிற்கு எதிர்வீட்டில் புதுமணத்தம்பதிகளான சிவா, தேஜஸ்வி வாழ்ந்து வருகிறார்கள். சிறுவன் மாஸ்டர் அஹான் தனது வீட்டில் இருப்பதை விட இவர்கள் வீட்டில் தான் அதிகமாக இருக்கிறான்.

சிறுவன் மாஸ்டர் அஹானுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. பள்ளிக்குச் செல்லும் வழியில் தெருநாய் ஒன்று தினமும் அஹானை விரட்டுகிறது.

அந்த தெரு நாயை பழிவாங்க அஹான் ஒரு குட்டி நாயை வாங்கி வளர்த்து வருகிறான். சிறுவன் அஹான் அந்த நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறான்.

இந்நிலையில் இரண்டு சிறுவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பார்த்த அந்த நாய் சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறது. ஆனால் எதிர்பாராவிதமாக நாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது.
இறுதியில் நாய் உயிர் பிழைத்ததா? சிறுவன் மாஸ்டர் அஹான் நாயைக் கண்டுபிடித்தானா என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறுவன் மாஸ்டர் அஹானின் முகமே படம் முழுக்க தெரிகிறது. இவருக்கு அடுத்தபடியாக படம் முழுக்க வருவது நாய்கள் தான். இவர் நாயுடன் பழகும் காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

மேலும் புதுமணத் தம்பதிகளாக நடித்துள்ள சிவா, தேஜஸ்வி குறைவான காட்சிகளில் வந்தாலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சத்யன், ஷர்மிளா, ஆரோக்யராஜ், நாஞ்சில் வி ராம்பாபு, ஜேன், புலிக்குட்டி ஆகியோரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

நடிகர், நடிகைகளை முன்னிலைப்படுத்தியே பெரும்பாலான திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் பிரதீப் கிளிக்கர். துணிச்சலாக நாய்க்கும், சிறுவனுக்கும் இடைப்பட்ட பாசப்பிணைப்பை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் பௌவ் பௌவ் தமிழ் சினிமாவிற்கு புதுமையான படைப்பாக வந்துள்ளது.