எக்கோ ; விமர்சனம்

ஹாரர் பாணியில் உருவாக்கி இருக்கும் த்ரில்லர் படம் இது. ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த்தை முதலாளியான பூஜா ஜவேரி காதலிக்கிறார். தனது அம்மாவிடம் நேரம் பார்த்து இந்த விஷயத்தை சொல்ல நினைக்கிறார் ஸ்ரீகாந்த். அதற்குள் நீண்ட நாளைக்கு பிறகு தனது கிராமத்திற்கு செல்ல விரும்பிய அம்மாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்லும் ஸ்ரீகாந்த் அங்கே எதிர்பாராத விதமாக தனது மாமன் மகள் வித்யாவை திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

திருமணமாகி சென்னைக்கு வந்ததும் சில நாட்களில் சகஜமாக குடித்தனம் நடத்த ஆரம்பிக்கின்றனர். ஆனால் பயந்த சுபாவம் கொண்ட வித்யா பூனைக்கு பயப்படுவது, பேய் படம் பார்த்து பயப்படுவது என நாளுக்கு நாள் அச்சப்படுகிறார். எங்கிருந்தோ கேட்கும் குரல் அவரை டார்ச்சர் செய்கிறது.. ஒருநாள் ஸ்ரீகாந்த் வீட்டில் இல்லாத சமயத்தில் தன்னைத்தானே குத்திக்கொண்டு உயிர் இழக்கிறார்.

சில நாட்கள் கழித்து தன்னை விரும்பிய தனது முதல் காதலியையே ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் வித்யாவுக்கு நடந்த அனைத்தும் அடுத்து ஸ்ரீகாந்த்துக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து பேய் பூதங்களை விரட்டுவதில் வல்லவரான ஆசிஸ் வித்யார்த்தியிடம் தஞ்சமடைகிறார் ஸ்ரீகாந்த்.

அவரது வீட்டிற்கு வருகை தரும் ஆசிஸ் வித்யார்த்தி வித்யாவின் சாவுக்கு காரணம் யார் ? இப்போது ஸ்ரீகாந்தை மிரட்டுவது யார் என கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இதற்கு விடை தெரியும்போது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அவரால் ஸ்ரீகாந்தத்தை காப்பாற்ற முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

2 மணி நேரத்திற்கும் குறைவான படம் என்றாலும் மொத்த படத்தையும் திரில்லிங் என்கிற நூலால் இழுத்து கட்டி நம்மையும் இருக்கை நுனியில் அமர வைத்து விடுகிறார்கள்/

ஐடி நிறுவன ஊழியராக, அம்மாவுக்கு பாசமான பிள்ளையாக, காதலனாக, கணவனாக என தனது கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு வெரைட்டி காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஸ்ரீகாந்த் மிகச்சரியாக தனது வேலையை செய்திருக்கிறார். குறிப்பாக அமானுஷ்ய உணர்வுகளால் பாதிக்கப்படும்போது அவர் நடந்து கொள்ளும் விதம் நம்மையும் பயப்பட வைக்கிறது.

ஜாடிக்கேத்த மூடியாக ஸ்ரீகாந்தன் மனைவியாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார் வித்யா பிரதீப். குறிப்பாக பேய்ப் படங்களுக்கும், பூனைக்கும் கூட அவர் பயப்படுவதுடன் நம்மையும் சேர்த்து மிரட்டுகிறார். இன்னொரு நாயகியாக பூஜா ஜவேரி ஹைடெக் கதாபாத்திரத்தில் நம்மை ஈர்க்கிறார்.

பேய் ஓட்டும் நிபுணராக ஹைடெக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அசர வைக்கிறார் ஆசிஸ் வித்யார்த்தி. கடைசியில் ஸ்ரீகாந்த இடம் அவர் சொல்லும் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராத ஒன்று. பாசமான அம்மாவாக பிரவீணா, பக்கபலமான நண்பர்களாக ஸ்ரீநாத் மற்றும் கும்கி அஸ்வின், கிராமத்து மனிதர்களாக சில நிமிட காட்சிகளே வந்தாலும் டெல்லி கணேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் இந்த கதைக்கு பொருத்தமான தேர்வு தான்.

பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடப்பதால் ஒளிப்பதிவாளர் கோபிநாத் அதில் என்ன வித்தை காட்ட முடியுமோ அத்தனையையும் காட்டியுள்ளார். நரேன் பாலகுமாரின் பின்னணி இசையும் திகில் ஊட்டுவதற்கு என்று உற்சாகமாக வேலை பார்த்துள்ளது.

பொதுவாக பேய் படங்களுக்கு என ஒரு வலுவான பிளாஸ்பேக்கும் பேயாக மாறுவதற்கு என ஒரு பின்னணியும் இருக்கும். இந்த படத்தில் அது அப்படியே கொஞ்சம் உல்டாவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ள நவீன் கணேஷ் ஒரு அறிமுக இயக்குனர் என்றாலும் படம் பார்க்கும்போது ஏற்கனவே டைரக்ஷனில் கரை கண்டவர் போல வெகு நேர்த்தியாக காட்சிகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்,

ஒரு ஹாரர் மற்றும் த்ரில்லர் படத்திற்கு தேவையான அம்சங்களை இதில் சேர்த்து இருந்தாலும் மற்ற படங்களில் இருந்து தனித்து தெரியும் விதமாக இன்னும் சில சுவாரசியங்களை உள்ளே சேர்த்திருக்கலாம். வித்யாவுக்கும் ஸ்ரீகாந்த்திற்கும் நடப்பதெல்லாம் எதனால் நடக்கிறது என கடைசி வரை நம்மால் யூகிக்க முடியாமல் கொண்டு சென்றதற்காக இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.