கடுகு – விமர்சனம்


என்னது ராஜகுமாரன் ஹீரோவா..? ஹீரோவா நடிச்ச பரத் வில்லனா..? என படித்த நியூஸைஎல்லாம் வைத்து ஜெர்க் ஆகவேண்டாம் மக்களே.. ‘பத்து எண்றதுகுள்ள’ படத்துக்காக படத்துக்காக பாரினெல்லாம் போய்வந்த டைரக்டர் படமாச்சே என பயப்படாமல் கோயம்பேடு மார்க்கெட்டுக்குள்ளேயே வைத்து ‘கோலிசோடா’ படம் எடுத்த இயக்குனர் விஜய் மில்டன் தானே என நம்பி படம் பார்க்கவந்தால் நம் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறாரா விஜய் மில்டன்..?

கெட்டவங்களை விட மோசமானவங்க தப்பு நடக்கும்போது தட்டிக்கேட்காத நல்லவங்கதான் என்கிற அழகான ஒன்லைனை வைத்து ‘கடுகு’ தாளித்துள்ளார் விஜய் மில்டன்.. சரி..படத்தின் கதை..?

போலீஸ் அதிகாரியான ஏ.வெங்கடேஷுக்கு உதவி ஆளாக இருப்பவர் ராஜகுமாரன்.. இவரது அடிப்படை தொழில் புலிவேஷம் கட்டி ஆடுவது. இந்த நேரத்தில் வெங்கடேஷுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆக, அந்த ஊருக்கும் அவருடனேயே சென்று தங்குகிறார் ராஜகுமாரன்.

அந்த ஊரில் பள்ளி ஆசிரியையாக இருக்கும் ராதிகா பிரசித்தா மற்றும் போலீஸ்காரர் பரத் சீனி ஆகியோருடன் நட்பு ஏற்படுகிறது.. அதே ஊரில் முக்கியஸ்தராக இருக்கும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு வர ஆசைப்படும் பரத் தனது கட்சி மந்திரி ஒருவரை தனது ஊருக்கு அழைத்து மரியாதை செய்ய நினைக்கிறார்..

வந்த இடத்தில் மந்திரியின் காமக்கண்கள் ஒரு பள்ளிச்சிறுமியின் மீது பாய, அந்த புள்ளிமான் அந்த வேட்டை நாய்க்கு இரையாகி, தற்கொலை செய்து உயிரையும் விடுகிறது. தனது அரசியல் வளர்ச்சிக்காக பரத் இதை கண்டும் காணாமல் இருக்க, இந்த கேஸில் மூக்கை நுழைத்த காரணத்தால் இன்னொரு ஊருக்கு தூக்கியடிக்கப்படுகிறார் வெங்கடேஷ்..

ஆனால் அப்பாவியான ராஜகுமாரன் ஆசிரியையான ராதிகா பிரசித்தா மற்றும் பரத்சீனி இருவரின் உதவியுடன் சிறுமியின் சாவுக்கு நீதி தேட முயற்சிக்கிறார்.. புலிவேஷம் மட்டுமே போடும் அவரால் தப்பு செய்தவர்களுக்கு எதிராக புலிப்பாய்ச்சல் நிகழ்த்த முடிந்ததா என்பது தான் மீதிப்படம்.

வில்லன் என சொல்லமுடியாத அதேசமயம் நெகடிவான கேரக்டரில் பரத் நடித்துள்ளார். முதல் பாதியில் வில்லத்தனம் கலந்ததுபோலவும், இரண்டாம் பாதியில் நல்லவனாகவும் தனது நடிப்பில் மாற்றம் கொடுத்து நடித்திருப்பது சிறப்பு.

நாயகனாக வரும் ராஜகுமாரன் புலிப்பாண்டியாக மாறுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது.. ஒரு சில காட்சிகளிலும் புலி வேஷம் கட்டி ஆடும்போதும் கதைட்டல் வாங்கவும் செய்கிறார்.. ஆனால் வசன உச்சரிப்பிலும் சில இடங்களில் செயற்கையான நடிப்பிலும் தடுமாறவும் செய்திருக்கிறார்.

நாயகியாக ராதிகா பிரசித்தா அளந்தெடுத்த நடிப்பு.. கான்ஸ்டபிளாக வரும் பரத் சீனி அவ்வப்போது கலகலப்பூட்டி தனது புதுவரவை ரசிகர்களின் மனதில் நிலைநிறுத்தியுள்ளார். ஏ.வெங்கடேஷ் உட்பட மற்ற கதாபாத்திர தேர்வும் குறைசொல்ல முடியாதவை.. அமைச்சராக வரும் தயா வெங்கட்டும் காமம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

விஜய் மில்டனே ஒளிப்பதிவு என்பதால் காட்சிகளை உறுத்தல் இல்லாமல் செதுக்கியுள்ளார். அருணகிரியின் இசையும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது அரசியல் அதிகாரத்தின் மூலமாக சாமான்ய மக்களுக்கு நேரும் துயரங்களை தட்டிக்கேட்க துடிக்கும் எவருக்கும், நியாயமான தீர்வு கிடைத்ததே கிடையாது. அதேநேரத்தில், எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லையெனில் ஒரு சாமான்யனின் கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

ராஜகுமாரனை ஹீரோவாக்கி, கதையை மையப்படுத்தி படம் எடுக்கும் துணிச்சலுக்காக விஜய் மில்டனை பாராட்டலாம். படம் முழுவதும் ரொம்பவும் சீரியஸாக செல்லாமல் ஆங்காங்கே நகைச்சுவையும் கொடுத்து பல இடங்களில் செயற்கைத்தனமாக பின்னப்பட்ட காட்சிகளும் ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதையும் படத்தின் வேகத்துக்கு லகான் போடுகின்றன… இருந்தாலும் படம் முடிந்து வரும்போது நிறைவான படம் பார்த்த திருப்தி ஏற்படுவது உண்மை..