பகடி ஆட்டம் ; விமர்சனம்


‘துருவங்கள் பதினாறு’ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்துக்கு வந்த ரகுமான், மீண்டும் போலீஸ் அதிகாரியாக ஆடியிருக்கும் ஆட்டம் தான் இந்த பகடி ஆட்டம்.

கோடீஸ்வரர் நிழல்கள் ரவி-ராஜஸ்ரீ தம்பதியின் மகன் சுரேந்தர். பணத்திமிரில் காதல் வலை வீசி பல இளம்பெண்களை சீரழிக்கின்றார்.. இந்தநிலையில் திடீரென யாராலோ கடத்தப்படுகிறார் சுரேந்தர்.. இந்தநிலையில் திறமையான போலீஸ் அதிகாரியான ரகுமான் இந்த வழக்கை விசாரிக்க களம் இறங்குகிறார்.. சுரேந்தரையும் கண்டுபிடிக்கிறார்.. அவரை கடத்தியவர்களையும் பிடிக்கிறார். ஆனால் கடத்தியது யார், எதற்காக கடத்தினார்கள் என்பதை அறிந்ததும், நியாய தர்மத்துக்கு உட்பட்டு ரகுமான் என்ன முடிவெடுக்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

ரகுமானுக்கு போலீஸ் வேடம் அழகாக பொருந்தி இருக்கிறது. வழக்கை அவர் விசாரிக்கும் தோரணையும் ஆங்காங்கே இந்த சமூகத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் தவறான சலுகைகளை கண்டிப்பதுமாக காட்சிக்கு காட்சி நடிப்பில் மிடுக்கு கூட்டுகிறார்.. காணமல் போன சுரேந்தரை கண்டுபிடிக்க அவர் வகுக்கும் திட்டங்கள் பலே ரகம்.

கதாநாயகியாக வரும் மோனிகா அந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு.. பிளேபாயாக வரும் புதுமுகம் சுரேந்தரும் அந்த கேரக்டராக மாறியிருக்கிறார்.. பணக்கார திமிரில் நடந்துகொள்ளும் நிழல்கள் ரவி, பாசக்கார அம்மா ராஜஸ்ரீ, மோனிகாவின் அக்காவாக வரும் கௌரி நந்தா உள்ளிட்ட பலரும் தங்களது பங்கை சிறப்பித்துள்ளனர்.. கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளதோடு தேவையான இடங்கள் தனது தந்தையின் பழைய மெலடிகளையும் இடையிடையே நுழைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்..

படத்தை போரடிக்கவிடாமல் கொண்டுசெல்லவேண்டும் என்கிற முடிவுடன் இயக்கியுள்ள ராம் கே.சந்திரன் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். வெறும் விறுவிறுப்பான படமாக மட்டுமல்லாமல், வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் செல்லம் எவ்வளவு விபரீதமானது, இளம்பெண்கள் காதல் என்ற வலையில் விழாமல் கவனமாக இருக்கவேண்டியது என சோஷியல் மெசேஜ் ஆகவும் சொல்லியிருப்பதால் கூடுதல் பாராட்டுக்களை பெறுகிறார். மொத்தத்தில் பகடி ஆட்டம் – சோடை போகாத விறுவிறுப்பான ஆட்டம்..