சத்திய சோதனை ; விமர்சனம்

பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இந்த சத்திய சோதனை. சில வருடங்களுக்கு முன்பு விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்கிற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஒரு எளிமையான படம் தான்.

வேலை வெட்டி எதுவும் இல்லாத பிரேம்ஜி ஒரு பொட்டல் காடு வழியாக நடந்து செல்லும் போது அங்கே ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். அந்த உடலை ஓரமாக நிழலில் இழுத்துப் போட்டுவிட்டு வாட்ச், கழுத்தில் செயின் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்து ஒரு நபர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்கிற தகவலையும் சொல்கிறார்.

ஆனால் போலீசார் அவரையே கொலை செய்ததாக சந்தேகப்படுகின்றனர். அந்த நிலையில் கொலை செய்த உண்மையான கொலையாளிகள் போலீசில் சரண்டர் ஆகின்றனர். அதே சமயம் கொலையானவர்’ உடலில் நிறைய நகைகள் இருந்தது என்றும் கூறுகின்றனர். இதனால் அந்த நகைகளை பிரேம்ஜி தான் எடுத்திருப்பாரோ என போலீசார் மீண்டும் அவரை சந்தேகப்படுகின்றனர்.

போலீசின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க அங்கிருந்த வாக்கி டாக்கியையும் தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிறார் பிரேம்ஜி. அவரிடமிருந்து எப்படியாவது நகைகளை பறித்து தாங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் போலீசார் பிரேம்ஜியை தேடுகின்றனர். அவர் சிக்கினாரா ? நகைகள் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

சாதாரண மனிதர்கள் போலீஸ் ஸ்டேஷனை கண்டாலே ஏன் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்கள் என்பதை ரொம்பவே நகைச்சுவை கலந்த கிண்டல் பாணியில் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த அப்பாவித்தனமான, பின் விளைவுகள் ஏதும் அறியாத இளைஞரின் கதாபாத்திரத்தில் பிரேம்ஜி அமரனை தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு கோக்குமாக்கு வேலைகள் செய்து நம்மை பெருமளவில் ரசிக்க வைக்கிறார். போலீஸிடம் வாக்கி டாக்கி எடுத்துக் கொண்டு தப்பித்தபின் அதை வைத்து அவர் செய்யும் அலம்பல்கள் செம காமெடி.

படத்தில் கதையின் இன்னொரு நாயகன் என்றால் அது மைக் செட் சித்தன் மோகன் தான். போலீஸ் ஏட்டையாவாக வரும் அவர் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்களில் இப்படித்தான் ஏட்டையாக்கள் இருப்பார்களோ என்று நினைக்க வைக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு வழக்கையும் எப்படியாவது யார் மீது சுமத்தி முடிக்க நினைப்பதும் சம்பவங்கள் நடந்த இடங்கள் கிடைக்கும் பொருட்களை தங்கள் வசப்படுத்த நினைப்பதும் என பல போலீஸ்காரர்களின் எதார்த்த குணத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவருடன் இணைந்து கூடவே வரும் இன்னொரு போலீஸ்காரரும் தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். இதையெல்லாம் தாண்டி கிராமத்தைப் பாட்டி ஒருவர் பண்ணும் அட்டகாசங்கள் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றது. கேமராவை பார்க்கிறோம் என்கிற பயமே இல்லாத முகத்துடன் அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளார் அந்த பாட்டி. குறிப்பாக போலீசில் அவர் மாட்டிக்கொண்டு தப்பிப்பதற்காக செய்யும் கலாட்டாக்கள் சிரிக்காத வரையும் சிரிக்க வைத்து விடும்.

நீதிபதியாக வரும் பேராசிரியர் ஞானசம்பந்தம் இன்றைய நீதிமன்ற நடைமுறைகளையும் போலீசார் வழக்கை எப்படியெல்லாம் ஜோடிக்கின்றனர் என்பதையும் தனது சிறப்பான நடிப்பாலும் வசனங்களாலும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

இயக்குனர் சுரேஷ் சங்கையா ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றியே அழகாக திரைக்கதை அமைத்துள்ளார். பெரும்பாலும் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் கதை நகர்வது மட்டும் கொஞ்சம் சலிப்பை தருகிறது. அதே சமயம் அந்த கிராமத்து மனிதர்களின் எதார்த்தத்தையும் வாழ்க்கை முறையையும் அழகாக இதில் சொல்லி இருக்கிறார். ஜாலியாக பார்த்து பொழுது போக்குவதற்கு இந்த சத்திய சோதனை ஒரு சரியான படம்.