சத்ரு – விமர்சனம்


வசதியான வீட்டு குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கொள்ளையர்களிடமிருந்து சிறுவன் ஒருவனை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி கதிர், அவர்களில் ஒருவரை போட்டுத்தள்ளுகிறார். கோபம் கொண்ட கொள்ளையர் தலைவன் லகுபரன் கதிரின் குடும்பத்தையே நிர்மூலம் ஆக்க வேண்டும் என சவால் விட்டு தனது வேலையை ஆரம்பிக்கிறார்.

ஆனால் ஒரே நாளில் லகுபரன் கும்பலை கூண்டோடு அழித்தே தீருவேன் என தனது இழப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வெறியுடன் சுற்றுகிறார் கதிர். வெற்றி யாருக்கு..? கதிர் சந்திக்கும் இழப்புகள் என்ன என்பது மீதிக்கதை.

சில ஹீரோக்களுக்கு வளர்ச்சி என ஆரம்பித்துவிட்டால், அதை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது. தற்போது ஹீரோ கதிருக்கும் அதுதான் நடந்து வருகிறது. தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதிர், இந்தப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் அவதாரம் எடுத்து சினிமாவில் தன்னை அடுத்த கட்டத்திற்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை அவருக்கு பக்கபலமாக நின்று கைகொடுத்திருக்கிறது.

நாயகி சிருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா, பவன் என உப கதாபாத்திரங்கள் அவ்வப்போது தேவையான அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாயகன் கதிருக்கும் வில்லனுக்குமான ஆடு புலி ஆட்டம் தான் பிரதானமாக படமாக்கப்பட்டுள்ளது.

முகத்தில் எந்நேரமும் வன்மம் கொப்பளிக்க கதிரின் குடும்பத்தை வேட்டையாட துடிக்கும் கொடூர வில்லனாக இன்னொரு ‘பாண்டியா’வை பார்த்தது போல இருக்கிறார் இந்த லகுபரன். இனி இவரை தேடி நல்ல நல்ல வாய்ப்புகள் வரும் என்பது உறுதி.

லகுபரனின் கூட்டாளிகள் ஆகட்டும், கதிரின் நண்பர்கள் ஆகட்டும் இரண்டு தரப்பினருமே பொருத்தமான கச்சிதமான தேர்வு. சிடுசிடு போலீஸ் அதிகாரியாக வரும் மாரிமுத்து வழக்கம்போல தனது பணியை குறைவில்லாமல் செய்துள்ளார்.
நடிகை சுஜா வாருணிக்கு மிக முக்கியமான கேரக்டர். அதேபோல கதிருக்கு உதவியாக வரும் அந்த சிறுவனும் நம்மை ரசிக்க வைக்கிறார். போலீஸ் கதைகள் என்றாலே இரு தரப்பினரும் எதிரியை வேட்டையாடும் லாகவம் தான் படத்தின் வெற்றிக்கு துணை நிற்கும்.. இதில் படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை எந்தவித தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டன்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியும், பின்னணி இசை அமைத்த சூரிய பிரசாத்தும் அவரது வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணித்திருக்கிறார்கள் பிரசன்னா.ஜி.கேவின் படத்தொகுப்பு அந்த விறுவிறுப்பை படமெங்கும் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளது

மொத்த படத்திலும் ஒரே ஒரு குறை, அதை குறையென்று கூட சொல்ல முடியாது.. ஒரு சின்ன நெருடல் என்னவென்றால் இது ஏற்கனவே வெளியான ஒரு ஹிட் படத்தை நினைவூட்டுவது தான்.. மற்றபடி, ரசிகர்கள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய, கொடுத்த காசுக்கு வஞ்சனை செய்யாத ஒரு படம் தான் இந்த ‘சத்ரு.