கிராமத்து மக்களிடம் நல்ல பெயர் பெற்ற போஸ்பாண்டியை (கிஷோர்). தனது மதிப்பு மரியாதையை மக்களிடம் குறைத்ததற்காக சமயம் பார்த்து பழிதீர்க்க காத்திருக்கிறார் பெரியவர் உக்கிரபாண்டி (பூ ராமு).. ஆனால் போஸ்பாண்டியோ வரும் காலத்தில் கல்விதான் பிரதானம் என்று, தனக்குப்பின் யாரும் அரிவாள் தூக்க கூடாது என்கிற எண்ணத்தில், ஊர் இளைஞர்களை அடக்கிவைக்கிறார்,
அதற்கேற்ற மாதிரி தனது தம்பிகள் இருவரையும் போலீசாகவும், இன்ஜினீயராகவும் ஆக்குவதற்கு படிக்கவைக்கிறார். ஆனால் போஸ்பாண்டியால் அவமானப்பட்ட உக்கிரபாண்டியின் மகன்கள் மூவரும் கோவில் திருவிழாவில் வைத்து போஸ்பாண்டியை வெட்டி சாய்க்கின்றனர். சின்ன எறும்பை கொல்வதில் கூட உடன்பாடு இல்லாத போஸ்பாண்டியின் தம்பி திலகர் (துருவா) வெகுண்டெழுந்து அண்ணனை கொன்ற மூவரையும் கொடூரமாக பழி தீர்க்கிறார்.
மகன்களை பறிகொடுத்த உக்கிரபாண்டியின் வெறி இன்னும் அதிகமாகிறது. திலகரை தீர்க்க காலநேரம் பார்த்து கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறார். மகன்களை இழந்த அவருக்கு கைகொடுக்கும் விதமாக, திலகரை வஞ்சம் தீர்க்க அவரது பேரன்கள் முன் வருகின்றனர். தனது அண்ணன் மகன் தான் தனது உயிர் என வாழ்ந்துவரும் திலகர், இவர்களின் பகை முடித்தாரா.. இல்லை பகையில் பலியானாரா என்பது க்ளைமாக்ஸ்.
ஒரே ஜாதியில் இருக்கும் இரண்டு தரப்பினருக்கான ‘யார் பெரியவன்’ என்கிற மோதலும் அந்த மோதலின் முடிவு என்ன என்பதும் தான் திலகர் படத்தின் கதை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் தான் திலகர்’ கொஞ்சம் வித்தியாசப்படுகிறார். படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக யதார்த்த கிராமத்து மனிதர்களை நம் முன்னே உலாவவிட்டிருப்பதால் கதையுடன் எளிதாக ஒன்ற முடிகிறது.
கதையின் உயிரோட்டத்துக்கு முக்கிய காரணம் இந்த மோதல்களை எல்லாம் ஒழித்து அடுத்த தலைமுறையை கல்வியின் பக்கம் திருப்பிவிட நினைக்கும் போஸ்பாண்டியாக நடித்திருக்கும் கிஷோர் தான். ஒவ்வொரு பிரேமிலும் கம்பீரம் காட்டும் கிஷோரின் நடிப்பும் கிராமத்து மண்மணம் மாறாத பேச்சும் அவரது கதாபாத்திரத்திற்கு கண்ணியம் சேர்க்கின்றன.
அண்ணனின் மரணத்தால் தனது கொள்கையான அஹிம்சையை தூக்கி வீசிவிட்டு ஆயுதம் ஏந்தும் திலகராக நடித்திருக்கும் துருவா, நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல புதுமுக நடிகர் கிடைத்த மனநிறைவை ஏற்படுத்துகிறார். ஒரே படத்தில் ஒரு கேரக்டரின் இருவேறு பரிமாணத்தை ஒரு அறிமுக நடிகர் பிரதிபலிப்பது என்பது மிக ஆச்சர்யமான விஷயம்.. எப்போதாவது ஒரு சிலர் மட்டுமே அப்படி மாற்றம் காட்டி நம்மை ஆச்சர்யப்படுத்துவார்கள்..
இதோ இப்போது தமிழில் ‘திலகர்’ படத்தில் அறிமுகமாகி இருக்கும் துருவாவின் டர்ன்.. எக்ஸலன்ட் துருவா..! படத்தில் அவரது மூன்று விதமான தோற்றங்களும் அலட்டல் இல்லாத நடிப்பும் சினிமாவில் அவரை அடுத்தகட்டத்திற்கு வழி நடத்திச்செல்லும் என்பது நிச்சயம்.
இப்படியும் கூட இவரால் மிரட்டலாக நடிக்க முடியுமா எனும்படி உக்கிரபாண்டியாக வாழ்ந்திருக்கிறார் ‘பூ’ ராமு. ஒவ்வொரு காட்சியிலும் நீறு பூத்த நெருப்பாக வன்மத்தை வெளிப்படுத்தும் இவர் தன்னை நோக்கி திலகர் அரிவாளை ஓங்கியபோதும் கூட கண்களை இமைக்காமல் நெஞ்சுரத்துடன் நிற்பது இவரது யதார்த்த நடிப்பிற்கு ஒரு சாம்பிள்…
துறுதுறு கதாநாயகியாக மிருதுளா பாஸ்கர், துருவாவை அவரது மென்மையான குணத்திற்காகவே விரட்டி விரட்டி காதலிப்பதும், தனது காதலில் இருந்து விலகும் காட்சியில் அதற்கான நியாயத்தையும் சரியாக வெளிப்படுத்துகிறார். கிஷோரின் மனைவியாக மலையாள திரையுலகில் இருந்து அடியெடுத்து வைத்திருக்கும் அனுமோல் குறைவான வசனம் பேசி, கண்களிலேயே நடிப்பை ஒளிரவிட்டிருக்கிறார். இவரைத்தேடி இனி தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும் என்றே தெரிகிறது.
மொத்த படத்திலும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற ‘திக் திக்’கை இயக்குனர் பெருமாள் பிள்ளை கடைசிவரை தக்கவைக்கிறார். தன் அண்ணனை கொன்றவனை திலகர் பழி தீர்க்கும் அந்த பத்து நிமிட காட்சி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அடுத்த தலைமுறை இளைஞர்கள், திலகரை கொல்ல ஆயுதம் தூக்கும்போது திகிலும் ஏற்படவே செய்கிறது. இருப்பினும் மோதல்களை கைவிட்டு கல்வியின் பக்கம் கவனத்தை திருப்புங்கள் என நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ள இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.