யூகன் – விமர்சனம்

ரெண்டு பங்களா, இருபது நாள் கால்ஷீட், அதுல முக்கால்வாசி நைட் எபக்ட் என்கிற வழக்கமான பேய்ப்பட பார்முலாக்களில் வந்திருக்கும் படம் தான் யூகன். சரி யூகனில் பேயை எப்படி வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளார்கள் பார்ப்போமா..?

சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் நான்கு நண்பர்கள்.. அவர்களுடன் ஐந்தாவது நண்பராக புதிதாக இணையும் யஷ்மித்.. நண்பர்களில் ஒவ்வொருவருக்காக டெரர் எம்.எம்.எஸ் வருகிறது.. அதனை தொடர்ந்து தங்களது வீட்டில் அமானுஷ்யமான பல நிகழ்வுகளை உணர்கிறார்கள்.. மற்ற நண்பர்களுக்கு சேதி சொல்லி அவர்கள் காப்பாற்ற வரும்முன் பரிதாபமாக மரணத்தை தழுவுகிறார்கள்.

வரிசையாக மூவர் மரணிக்க, போலீஸ் அதிகாரி விசாரணையில் மற்றவர்கள் யோக்கியர்கள் போலத்தான் பதில் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த மரணங்களின் மூலம், ஐந்து பேரையும் இணைக்கும் நிகழ்வாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன உண்மை தெரிய வருகிறது. மீதி இருந்த இருவர் தப்பித்தார்களா..? என்பது க்ளைமாக்ஸ்.. அங்கே வைக்கிறார்கள் பாருங்கள் ஒரு ட்விஸ்ட்.. படத்துக்கு போய் பாருங்க.

தனியாக கதாநாயகன் என யாரும் இல்லை.. ஐந்து கதாபாத்திரங்களில் ஐந்து பேர்.. அதில் வினய் ஆக நடித்திருக்கும் யஷ்மித்துக்கு மட்டும் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் கிடைத்திருக்கிறது. கதாநாயகி சாக்சி அகர்வால் ஆரம்பத்தில் அலட்டல் பேர்வழியாக இருந்தாலும், போகப்போக நம்மை வசீகரித்து விடுகிறார்.

பேய்ப்படம் என்பதற்காக பெரிய பெரிய அபார்ட்மென்ட்டுகளில் படம் எடுப்பது சரி.. அதற்காக ஒவ்வொரு பேச்சிலர் கதாபாத்திரமும் மாதம் 3௦ ஆயிரம் வாடகை கொடுக்கவேண்டிய அளவுக்கு மிகப்பெரிய அபார்ட்மென்ட்டுகளில் வசிக்கிறார்கள் என்பது எல்லாம் என்ன லாஜிக் சார்..?

அதேபோல ஒவ்வொருவரையும் கொல்வதற்காக வரும் பேய், குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு குறையாமல் பங்களாவின் ஒவ்வொரு ரூமிலும் புகுந்து விளையாட்டு காட்டுவது ஏதோ அந்த பேய், வாடகைக்கு வீடு பார்க்கவந்த மாதிரிதான் தெரிவதுடன், படத்தில் அரைமணி நேரத்தை கடத்துவதற்கே பயன்படுகிறது. கொஞ்சம் புதுசா யோசிச்சிருந்தா நல்லா இருக்கும்..

கதாநாயகி போட்டி கம்பெனிக்கு சாப்ட்வேரை விற்றதாக நம்பவைக்க, அவரது கம்ப்யூட்டர், அவரது ஈமெயிலில் இருந்தே அனுப்பியதாக நம்ப வைக்கிறார்கள் அவரை பிடிக்காத நான்கு பேர். அது கூட ஓகே.. அப்படி வேறு நபர் அவரது கேபினுக்கு வந்து அனுப்பும் காட்சி நிறுவனத்தின் காட்சி கேமராவில் பதிவாகும் என தெரிந்து அந்த நேரத்தில் கேமராவை ஆப் செய்வது கூட ஓகே தான். ஆனால் கதாநாயகிதான் இதனை எதிரிகளுக்கு அனுப்பியுள்ளார் என நம்பும் உயர் அதிகாரி, அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏன் கேமரா வேலைசெய்யாமல் போனது என்பது பற்றி கண்டுகொள்ளவே இல்லையே..

ஒரு படம் பண்ணும்போது நான்கு கோணங்களில் இருந்தும் யோசிக்கவேண்டும் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.. சில இடங்களில் திகிலும், த்ரில்லும், ஒரு சில இடங்களில் ட்விஸ்ட்டும் இருப்பது உண்மைதான்.. ஆனால் அதுமட்டுமே ஒரு பேய்ப்படத்துக்கு போதாதே..!

ஆனாலும் த்ரில்லர் படம் என்கிற வகையில் இயக்குனர் கமல்ஜியின் முயற்சி ஓரளவுக்கு இளைஞர்களை கவர வாய்ப்பிருக்கிறது.