அட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.!


இயக்குனர் அட்லீயும் கதை திருட்டு பிரச்சனையும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வராது போலத்தான் தெரிகிறது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய மெர்சல் படம் மூன்றுமுகம், அபூர்வ சகோதரர்கள் மற்றும் இன்னும் ஒன்றிரண்டு படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்டதாக படம் வெளியான நாள் முதலே குற்றச்சாட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் ரஜினியின் மூன்றுமுகம் படத்தை மீண்டும் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி வைத்துள்ளார். ஆனால் அட்லீ மெர்சல் படத்தில் மூன்றுமுகம் பட காட்சிகளை பல இடங்களில் காப்பியடித்து வைத்துவிட்டார் என்பதாக ஆடுகளம் கதிரேசன் குற்றம் சாட்டி புகாரும் அளித்திருந்தார்.

இந்தநிலையில் இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஐந்து பேர் அட்லீயை வரவழைத்து பேசியிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக அட்லீக்கு ஒரு குறும்படம் போட்டு காட்டியுள்ளார் கதிரேசன். அதில் அட்லீ எந்தெந்த காட்சிகளை மூன்றுமுகம் படத்தில் இருந்து காப்பியடித்து மெர்சல் படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பதை இரண்டு பட காட்சிகளையும் இணைத்து அந்த குறும்படத்தை பக்காவாக உருவாக்கி இருந்தாராம்.

இதை பார்த்து அட்லீ அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மெர்சல் என் கற்பனையில் தோன்றிய கதை என கூலாக கூறினாராம்.. ஆனால் அவரை ரவுண்டுகட்டிய தயாரிப்பாளர் குழு, இதே குறும்படத்தை திரையுலகை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்து போட்டுக்காட்ட போகிறோம் என்று கூறினார்களாம்.

அப்படி அதில் அட்லீயின் குட்டு வெளிப்பட்டால், அவர் கதிரேசனுக்கு நஷ்ட ஈடாக, மெர்சலுக்காக தான் வாங்கிய சம்பளத்தில் 3௦ சதவீதம் தொகையை நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கறாராக கூறிவிட்டர்களாம். அந்த 3௦ சதவீத தொகையே சுமார் ஐந்தரை கோடி ரூபாய் வரும் என்கிறார்கள் அட்லீயின் சம்பள விஷயம் தெரிந்தவர்கள்.