டபுள் டக்கர் ; விமர்சனம்

’.
ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை, அவர் செய்யும் தீமைகள் மற்றும் நன்மைகளை கணக்கெடுத்து கடவுளிடம் ஒப்படைப்பதோடு, இறந்தவரின் உயிரையும் கடவுளிடம் ஒப்படைக்கும் பணியை இரண்டு தேவதைகள் செய்து வருகிறார்கள். லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அந்த இரண்டு தேவதைகள், நாயகன் தீரஜின் ஆயுள் முடிவதற்குள் தவறுதலாக அவரது உயிரை பரித்துவிடுகிறார்கள். இந்த விசயம் கடவுளுக்கு தெரிவதற்குள், தீரஜின் உடலில் அவரது உயிரை வைக்க முயற்சிக்கும் போது அவரது உடல் மாயமாகிவிட, அதனால் வரும் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களை நகைச்சுவையாகவும், அனிமேஷன் மூலம் வித்தியாசமாகவும் சொல்வது தான் டபுள் டக்கர்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தீரஜ், இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். தீ பட்ட காயத்தில் உள்ள தீரஜ் பரிதாபத்தையும், மற்றொரு தீரஜ் துறுதுறுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக காதல், காமெடி காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை ‘மட்டும்’ செய்திருக்கிறார். கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்த் ஒரு பக்கம், சுனில் ரெட்டி மற்றும் ஷாரா மறுபக்கம் காமெடி செய்ய, கூடுதலாக எம்.எஸ்.பாஸ்கர் கோஷ்ட்டியும், அவ்வபோது மன்சூர் அலிகான் மற்றும் கோவை சரளாவும் கோதாவில் இறங்கி அசரடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வரும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களின் வடிவவைப்பும், அந்த கதாபாத்திரங்கள் தங்களது உணர்வுகளை சினிமா கதாபாத்திரங்களாக மாறி வெளிப்படுத்தும் விதமும், புதிதாக இருப்பதோடு, பார்வையாளர்களை மெய்மறந்து சிரிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரனின் கேமரா, கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, அனிமேஷன் கதாபாத்திரங்களை, நட்சத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்திருப்பதை நேர்த்தியாக செய்திருக்கிறது. வித்யா சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

ஃபேண்டஸி காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மீரா மஹதி. அதிகமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்களை திரைக்கதையில் சரியான முறையில் பயன்படுத்தி, அவர்கள் மூலம் பல திருப்பங்களை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றுள்ளார் இயக்குநர் மீரா மஹதி.