அசுரனுக்கு வில்லனான தேசிய விருது இயக்குனர்…

வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் வில்லனாக நடிக்க தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “அசுரன்”. இப்படம் பூமணியின் “வெக்கை” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க உள்ள மற்றொரு கதாபாத்திரத்தில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கிறார். அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய `வட சென்னை’ படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ”அசுரன்” படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நெல்லை, கோவில்பட்டி பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.