நான் எப்பவுமே ஹீரோ இல்லை – நடிகர் கருணாஸ்

நந்தா படத்தில் “லொடுக்கு பாண்டி” வேடத்தில் பாலாவால் அறிமுகப் படுத்தப் பட்டு யார் இவர்? சூப்பராக நடிக்கிறாரே! சரியான தேர்வு என்று பாராட்டப் பட்ட கருணாஸ் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். திடீர் என்று கதாநாயகனாகி திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி,சந்தமாமா, ரகளபுரம் போன்ற படங்களில் நடித்தார்.

அவரிடம் பேசியதிலிருந்து…..

· நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாவது என்பது புதிதில்லை ஆனால் அதுவே தொடர்வதில்லையே!

நகைச்சுவை நடிகர்களுக்கென்று ஒரு வரைமுறையான கதைகள் மட்டுமே பொருந்தும்..சினிமாவின் வழக்கமான கதாநாயகத் தனம் உள்ள கதைகள் சரி வராது. பத்துப் பேரை அடிப்பது பஞ்ச்டயலாக் பேசுவது எதுவுமே காமெடி நடிகர்களுக்கு ஒத்துவராது.அப்படிப்பட்ட கதைகளில் நடித்தால் படத்தின் ரிசல்ட் வேற மாதிரி ஆகும்.காமெடி நடிகர்களுக்கு பொருத்தமான கதைகள் அமையும் பட்சத்தில் தான் தொடர முடியும்.

நாகேஷ் நடித்த நீற்குமிழி, சர்வர் சுந்தரம், கவுண்டமணி நடித்த “பணம் பத்தும் செய்யும்” வடிவேலு நடித்த 23 ம் புலிகேசி, சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா , நான் நடித்த திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா போன்ற எல்லா படங்களுமே பேமிலி கதைகள் தான் ..காமெடியும் பேமிலியும் இணைந்தால் வெற்றி நிச்சயம்.

· கதாநாயகனான பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதிலேயே ஏன்?

நான் எப்பவுமே காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதில்லை ..காமெடி வேடங்கள் தான் ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கும்.

இப்போது பி.வி.பிரசாத் இயக்கத்தில் சகுந்தலாவின் காதலன், தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம், கார்த்தி நடிக்கும் “கொம்பன்” சத்யசிவா இயக்கும் படம், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கும் இரண்டு படங்கள், தர்மராஜ் இயக்கும் “இளமைக்காலங்களில்” ,உத்தம திருடன் என பத்து படங்களில் நடிதுக்கொண்டு இருக்கிறேன்.

· தயாரிப்பாளரானது பற்றி ..

நான் சினிமாவில் சம்பாதித்தது தானே சினிமாவில் முதலீடு செய்கிறேன். நல்ல கதை கிடைத்து, சரியான தயாரிப்பாளர் கிடைக்காத போதுதான் நானே தயாரிப்பாளரானேன் அதனால் கொஞ்சம் கடனாகி விட்டது ..அதையெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக அடைத்துக் கொண்டிருக்கிறேன். சிறிது காலத்திற்கு தயாரிப்பாளன் என்கிற கிரீடத்தை கழட்டிவைத்துவிட்டு நகைச்சுவை நடிகனாக மேக்கப் போடவே விரும்புகிறேன் என்றார் கருணாஸ்.