சிவகார்த்திகேயனுக்கும் செட்டாகாது.. விஜய்சேதுபதிக்கும் செட்டாகாது..!


வயல்காட்டில் வேலைபார்க்கிறவன், ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாசும் அணிந்துகொண்டு வேலைபார்த்தால் எப்படி கொஞ்சம் கூட ஒட்டாமல் வித்தியாசமாக உறுத்தலாக இருக்குமோ, அதேபோலத்தான் மலையாள சினிமாவில் வெளியாகும் சில நல்ல கதைகளை இங்கே தமிழுக்கு கொண்டு வந்து தேவையில்லாமல் சிதைப்பதும்..

பாபநாசம், 36 வயதினிலே படங்கள் ஹிட்டாகவில்லையா என கேட்கலாம்.. அதைத்தான் சொல்கிறோம் நமது மண்ணுக்கும் அதேசமயம் நமது ஆடியன்ஸுக்கும் ஏற்ற கதைகள் மட்டுமே மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்போது ஹிட்டாகின்றன. இல்லையென்றால் ‘புலிவால்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘ஜன்னல் ஓரம்’ என நிறைய நல்ல படங்கள் இங்கே பிளாப் ஆன வரலாறு சமீபத்திலேயே உண்டு..

அதுதான் சமீபத்தில் வெளியான துல்கர் நடித்த ‘சார்லி’ படத்தை தமிழில் ரீமேக் பண்ணினாலும் நடக்கும் என்கிறார்கள் இந்த ரீமேக் விவகாரங்களில் கரை தேர்ந்தவர்கள்.. அது அழகியல் பாணியிலான கதை.. அந்த ஊரில் ரசித்தார்கள்.. அதனால் ஐம்பது நாளை தாண்டியும் ஓடுகிறது.. நம்ம ஊரில் அதேபடம் ஐந்து நாள் ஓடினால் ஆச்சர்யம் தான். அது சிவகார்த்திகேயன் நடித்தாலும் சரி.. இல்லை விஜய்சேதுபதி நடித்தாலும் சரி.. ரெண்டுபேருக்குமே செட்டாகாது என்கிறார்கள்.