லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வம்பிழுக்க தயாராகும் ஜெய் படம்..!


இன்றைக்கு பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவைக்கும் விதமாக சேர்க்கப்படும் ஒரு டயலாக்காக மாறிவிட்டது லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’. இன்னும் சில இயக்குனர்கள் அந்தம்மா நடத்திவரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையே படத்தில் கிண்டலடித்து காட்சியாக வைக்கிறார்கள்..

சமீபத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கூட ஊர்வசியை வைத்து அந்த நிகழ்ச்சியை படு கிண்டலடித்து இருந்தார்கள்.. இதற்கெல்லாம் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆனாலும் இன்னும் சிலர் அடங்க மாட்டேன் என்கிறார்களே.. தற்போது ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்திலும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை செம கலாய் கலாய்த்திருக்கிறார்களாம். இன்னும் பல டிவி நிகழ்ச்சிகளையும் சேர்த்தே கலாய்த்திருக்கிறார்களாம்.

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கே இந்தப்படத்தில் தன்னை எந்த மாதிரி கலாய்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆசை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.