காப்பான் பத்திரிக்கையாளர் சந்திப்பு – அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – சூர்யா பேட்டி

காப்பான் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இதில் சூர்யா அளித்த பேட்டி

“காப்பான் படம் நிறைய நாடுகளில் எடுத்தோம். எனக்கு தனி மனிதனின் வளர்ச்சி பற்றிய சுயமுன்னேற்ற கதைகள் மிகவும் பிடிக்கும். சமூகத்தில் நடந்துகொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். அப்படி அமைந்தது தான் காப்பான். ஒவ்வொரு மனிதனும் ஹீரோ தான். எல்லோருமே கற்றுக்கொண்டுதான் மேலே வருகிறோம். அப்படி சமூகத்துக்கு அதிகம் தெரியாத ஒரு பணியில் இருப்பவர்களை பற்றிய கதைதான் காப்பான்.

காப்பான் இசை வெளீயீட்டு நிகழ்ச்சியில் ரஜினி என்னிடம் இது எத்தனையாவது படம் என்று கேட்டார். 37 என்று சொன்னதும் 37 தானா? என்று கேட்டார். முன்பு எல்லாம் ஒரே ஆண்டில் 20, 25 படங்களில் நடிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை என சொன்னார். எனக்கு அரசியல் வரும் எண்ணம் துளிகூட கிடையாது. என் படத்தில் வேண்டுமானால் அரசியல் இருக்கலாம்.

கல்விமுறை பற்றிய எனது கருத்து 14,15 ஆண்டுகளாக நான் தினம், தினம் பார்த்து அனுபவித்ததை தான் பேசினேன். நான் பேசியதில் சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் எனது கருத்து என் நேரடி அனுபவத்தில் இருந்து வந்தது. ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் மாணவர்களை பார்க்கிறோம். அவர்கள் எந்த சூழலில் இருந்து வருகிறார்கள் என்பது தெரியும். இந்த விஷயங்கள் வந்தால் பாதிக்கப்படுவோம் என்ற பயமும் கவலையும் அவர்களிடம் இருந்தது.

நான் அவர்களுக்காக பேசவேண்டிய இடத்தில் இருந்தும் பேசவில்லை என்றால் எப்படி? எனவே அவர்களது குரலாக தான் நான் பேசினேன். கல்வியாளர்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்ததுதான். அந்த மேடையிலேயே அவர்கள் பேசிய பின்னர்தான் நான் பேசினேன். நான் வெளிச்சத்தில் இருப்பதால் அது மக்களிடம் நன்றாக போய் சேர்ந்தது. தீமை நடக்கிறது என்று தெரிந்தும் கூட அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தீமை தான். கல்விக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது எனது வீட்டில் நடப்பதுதான். அதற்காக நிச்சயம் குரல் கொடுப்பேன்.”

இவ்வாறு சூர்யா பேட்டி அளித்தார்.

வரும் 20-ம் தேதி காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது.