‘மாரி’ தனுஷின் கையை மட்டுமல்ல காலையும் கடிக்கும்..!

சமீபகாலத்தில் வெளிவந்த புதுப்படங்களின் விளம்பரங்கள், ட்ரெய்லர்கள், பாடல்களை எல்லா சேனல்களும் வெளியிட்டன. ஆனால் ஒன்றுகூட புதுப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க முன்வரவில்லை. காரணம் விளம்பரங்களில் காசு வரும்., ட்ரெய்லர்கள் ஓசியிலேயே கிடைக்கும். ஆனால் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்க பணம் கொடுக்கணுமே.. குறிப்பாக ரஜினி நடித்த ‘லிங்கா” படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜெயா டிவி கூட, அதன் பிறகு வெளியான எந்த புதுப்படங்களின் உரிமையையும் வாங்கவில்லையாம்.

சன் டிவியோ கமல் நடித்த ‘பாபநாசம்’ விஜய்யின் ‘புலி’ என்று முன்னணி நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் உரிமையை மட்டும் வாங்குகிறது. ஆனால் சின்ன பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்குவதே இல்லை. அது மட்டுமல்ல சின்ன பட்ஜெட் படங்களின் டிரைலரை கூட சன் டிவி ஒளிபரப்புவதில்லை.

இப்போது தனுஷ் நடித்த ‘மாரி’க்கும் இதே கதி என்பது தான் அதிர்ச்சியை தருகிறது. ‘மாரி” படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஜெயா டிவி, சன் டிவி உட்பட பிரபல சேனல்கள் வாங்க மறுத்து விட்டன. அதனால் தனுஷ், தானே 9 கோடி கொடுத்து மாரியின் சாட்டிலைட் உரிமையை வாங்கி வைத்துக் கொண்டதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் தனுஷோ, “நான் என்ன சேனலா நடத்துறேன் சார்.. சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கி வைக்க” என மழுப்பலாகத்தான் பதில் சொல்கிறார்.

‘மாரி’ படம் ஹிட்டாகட்டும், அப்புறம் போட்டிபோட்டுக்கொண்டு சாட்டிலைட் ரைட்ஸ் வாங்க தேடி வருவார்கள் என்பது தனுஷின் கணக்கு. ஆனால் மாரியின் ரிசல்ட் தான் அப்படியே தலைகீழாக மாறிவிட்டதே.. இனி, சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதில் தனுஷ் எதிர்பார்த்த போட்டி எப்படி இருக்கும்.? ஆக கணக்கு போட்டு பார்த்தால் ‘மாரி’ தனுஷின் கையை மட்டுமல்ல காலையும் கடிக்கும் என்றே தெரிகிறது.