“சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்” ; கதறும் மைக்கேல் ராயப்பன்..!


நாடோடிகள் படம் மூலம் தயாரிப்பாளராக தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் மைக்கேல் ராயப்பன்.. அந்தப்படத்தை தொடர்ந்து சில படங்களை தயாரித்த அவர் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனவர். அப்படிப்பட்டவரையே கண்ணில் விரலை விட்டு ஆட்டி ரத்தக்கண்ணீர் வரவழைத்துள்ளார் நடிகர் சிம்பு.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது அல்லவா..? அதை தயாரித்தவர் இந்த மைக்கேல் ராயப்பன் தான். அந்தப்படம், மைக்கேல் ராயப்பனை மிகுந்த நட்டத்தில் தள்ளிவிட்டுள்ளதாக அரசால் புரசலாக பேச்சுக்கள் அப்போது வெளியாகின.

இந்த நிலையில் இன்று அந்தப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை உடன் வைத்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் ராயப்பன், சிம்பு தன்னை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது.

என் வாழ்வில் மிகப்பெரும் துயரத்தை சிம்பு உருவாக்கிவிட்டார். அட்வான்ஸ் வாங்கியது முதல் மொத்தப் படத்தையும் சிம்பு கையிலெடுத்துக் கொண்டார். சூட்டிங் தொடங்கியது முதல் சிம்பு பல கஷ்டங்களைக் கொடுத்தார். இந்தப்படம் துபாயில் தொடங்கி காசியில் முடியும் வகையில் தான் முதலில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் பல மாற்றங்களை செய்தார் சிம்பு. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் பெரிய நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதால் வேறு வழியின்றியே தொடர்ந்தோம்.

35% படப்பிடிப்பு முடிந்த நிலையிலேயே படத்தை வெளியிட வேண்டும் என எங்களை வற்புறுத்தினார். என்ன இழப்பு வந்தாலும் அதற்கு நான் பொறுப்பு என சிம்பு கூறினார். அதோடு இரண்டு பாகமாக எடுக்க வேண்டும் எனவும் சொன்னார். நானும் அதை நம்பினேன்..

ஆனால் இரண்டாம் பாகம் நடித்துத் தருகிறேன் என்றவரை இப்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என் நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கிய கடன்களை வீடு வாசலை விற்றுத்தான் அடைத்தேன்.. இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன். விநியோகஸ்தர்கள் தரப்பில் 20 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சிம்புதான் ஈடுகட்ட வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளோம்.. நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என சிம்பு மெது பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் மைக்கேல் ராயப்பன்.