லீக்கான ‘கபாலி’ ரஜினி லுக் ; அப்செட்டான ரஞ்சித்..!

பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ஜக்குபாய்’ படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியானபோது ரஜினி துப்பாக்கியை அருகில் வைத்தபடி முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. பின்னர் அந்தப்படம் கைவிடவும் பட்டது. ஆனால் அதன்பின் ரஜினி நடித்த எந்தப்படங்களுக்கும் பட அறிவுப்பு தினத்தன்றே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவேயில்லை.

இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி நடிக்கும் கபாலிக்கு அப்படி ஒரு போட்டோஷூட் எடுக்க விரும்பினார் ரஞ்சித்.. போட்டோஷூட்டில் திருப்தி தரும் படத்துடன், ‘கபாலி’யின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அன்றைய தினமே ஷூட்டிங்கை ஆரம்பிப்பதுதான் அவரது திட்டம்.

இந்தப்படத்தில் ரஜினி வயதான டான் வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் கசிய ஆளாளுக்கு இணையதளத்தில் ரஜினியின் புது லுக் இப்படித்தான் இருக்கும் என ஓவியம் வரைய ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் விரைவாக போட்டோஷூட் நடத்த நினைத்த ரஞ்சித், கடந்த சனிக்கிழமையன்று அதை நடத்தியும் விட்டார்.

ஆனால் அவர் ரஜினியின் லுக் இதுதான் என உறுதிப்படுத்தும் முன்னதாகவே போட்டோஷூட் நடந்த இடத்தில் இருந்து ரஜினியின் லுக்குடன் ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.. தான் அதிகாரப்பூர்வமாக பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னரே ரஜினியின் லுக் இப்படி லீக்கானதில் ரஞ்சித் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார் என்கிறார்கள்.