ஒரு கோடியை எட்டவில்லை ; உறுப்பினர் எண்ணிக்கை பற்றி ரஜினி ஓபன் டாக்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேசமயம் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக வலுவான கட்டமைப்பு வேண்டும் என நினைத்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி.. அதன்பேரில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்படுவதாக ரஜினி அறிவித்தார்

இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை தொடங்கினார்கள். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மன்றங்களில் உறுப்பினர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் சேர வசதி செய்யப்பட்டது. ஒருபக்கம் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கையும் கூடவே எல்லா மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்திற்கான அமைப்பு ரீதியான நிர்வாகிகள் நியமனமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

இந்தநிலையில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் ரஜினி மன்றத்தில் உறுப்பினராகியுள்ளனர்.என ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினியிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, இன்னும் ஒரு கோடியை தொடவில்லை.. அந்த இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறோம்” எனவெள்ளந்தியாக உண்மையை உடைத்து பேசினார்..

ஒரு லட்சம் பேர் இருந்தால் எங்களுக்கு பத்து லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூசாமல் பொய்சொல்லும் இந்த காலத்தில், கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேல் ரசிகர்களை கொண்டுள்ள ரஜினி, உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை இன்னும் ஒரு கோடியை எட்டவில்லை என வெளிப்படையாக கூறியிருப்பது அவரது மதிப்பை இன்னும் சில மடங்கு உயர்த்தியுள்ளது.