களவாணிக்கு பதிலாக வந்தார் அவரது மச்சான்


ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு படம் மீண்டும் வராதா? என ரசிகர்களை ஏங்க வைத்த, களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி, வெளியாக இருக்கிறது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘களவாணி 2’ படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்க்ரீன்சீன் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

களவாணி எனக்கு மிகவும் நெருக்கமான படம். சற்குணம் சார் தான் எனக்கு ஓவியா என்ற பெயரை வைத்தார். அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி. எனக்கும் விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட, இளவரசு சார், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் சிறப்பாக இருக்கும். விமல் என் நெருங்கிய நண்பர், அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர். இந்த படமும் களவாணி அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றார் நடிகை ஓவியா.

களவாணி படத்தை விட, இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். இது களவாணி படத்தின் முழு தொடர்ச்சி இல்லை. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். விமலின் களவாணி தோற்றத்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தபோதே அந்த நம்பிக்கை வந்தது. ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருக்கிறார். களவாணி 2 படம் பற்றி சொன்னபோதே எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ஓவியா. பயங்கர காய்ச்சல், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தார். சரண்யா மேடம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இளவரசு சார் படப்பிடிப்பை தாண்டி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை அழைத்து பேசுவார். ஆலோசனை வழங்குவார். வில்லன் கதாபாத்திரத்தில் துரை சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வில்லன் ராஜ், சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். நடராஜன் சங்கரன், மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி2 என 4 இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சற்குணம்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் விமல் கலந்து கொள்ளாதது ஆச்சர்யம் என்றால், இந்தப்படத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத ரோபோ சங்கர் கலந்துகொண்டது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.. அதன் காரணத்தையும் ரோபோ சங்கரே சொன்னார். விமலும் அவரும் இணைந்து நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருவதால், தன்னால் வரமுடியாத சூழ்நிலை என்பதால் ‘மச்சான் எனக்கு பதிலா நீயாவது போய்ட்டு வந்துருடா’ என கூறி விமல் தான் ரோபோ சங்கரை அனுப்பி வைத்தாராம்.