ரோபோ சங்கருக்கு ஆப்பு.. வாங்கித்தரப்போகும் வாட்ஸ் அப்பு..!

‘மாரி’ படத்தின் மிக மோசமான மேக்கிங்கையும், எந்நேரமும் டெம்பராக கெத்து காட்டும் தனுஷையும் பார்த்து சலித்துக்கொண்டவர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது என்றால் அது ரோபோ சங்கரின் டைமிங் காமெடி தான். படம் முழுதும் தனுஷ் கூடவே வரும் கேரக்டர்.. அதிலும் ஒரு காட்சியில் சிகரெட்டை பற்றவைத்து, ஸ்டைலாக புகையை ஊதி, அப்புறம் பணிவாக தனுஷிடம் கொடுப்பது போன்ற காட்சிகள் எல்லாம் தனுஷின் பெருந்தன்மையால் கிடைத்தவை தான்.

படம் ரிலீசான பின் ஊடக விமர்சனங்களிலும் வலைதளங்களிலும் ரோபோ சங்கரின் காமெடி பரவாயில்லை என பேசப்படுவது உண்மை தான். அதை ரசிகர்கள் சொல்வதும், உடன் நடித்த ஹீரோவான தனுஷ் சொல்வதும் தான் பொருத்தமாக இருக்கும். தனக்குத்தானே புகழ்ந்துகொண்டால் எப்படி இருக்கும்..?

மாரி ரிலீசான அன்று தனது நண்பர்களுக்கு உற்சாக பார்ட்டி கொடுத்தாராம் ரோபோ சங்கர்.. உற்சாகம் ஏற ஏற போதையில் தனுஷை கலாய்த்தும் தன்னை ஒரு ஹீரோவாக வைத்தும் சலம்பல் பண்ணினாராம். இதை ஒரு புண்ணியவான் வீடியோவாக எடுத்து தனுஷுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்து விட்டாராம். வீடியோவை பார்த்து தனுஷ் கொந்தளித்துள்ளதாக கேள்வி. தனுஷுக்கு தகவல் போனது தெரிந்து அரண்டு போய் கிடக்கிறாராம் ரோபோ.