சமுத்திரக்கனி சொன்னது சிம்புவுக்கு பொருந்தவில்லையே..!


சமீபத்தில் வெளியான ‘பசங்க-2’ படத்தில் ஒரு காட்சி.. அதில் தங்களது குழந்தைகளுக்கு நகரத்தின் மிகப்பெரிய பணக்கார பள்ளிக்கூடம் ஒன்றில் அட்மிஷன் அப்ளிகேசன் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பார்கள்.

அப்போது சமுத்திரக்கனி தனது மகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது அந்த வழியாக வருவார். அவரது மகளின் வகுப்பாசிரியரும் தனது பையனை அந்த ஆங்கில பள்ளியில் சேர்ப்பதற்காக வரிசையில் நிற்பார்.. அப்போது அந்த குழந்தை சமுத்திரக்கனியை பார்த்து எதற்கப்பா இத்தனை பேர் இப்படி க்யூவில் நிற்கிறாங்க.. என கேட்கும்.

அதற்கு சமுத்திரக்கனி, இங்கிலீஷ் மீடியத்துல தங்களோட பிள்ளைகளை சேர்க்கிறதுக்காக நிற்குறாங்கப்பா” என்பார்.. உடனே குழந்தை ரெண்டுக்கும் என்னப்பா வித்தியாசம்னு கேட்கும்.. அதற்கு அவர் “இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிறவன் இங்கிலீஷ்ல கெட்டவார்த்தை பேசுவான்.. தமிழ் மீடியத்துல படிக்கிறவன் தமிழ்ல கெட்டவார்த்தை பேசுவான்” என பதில் சொல்வார்..

ஆனால் இங்கிலீஷ் மீடியத்தில் படித்து வளர்ந்த பிள்ளையான சிம்பு, பீப் சாங்கில் தான் உச்சரித்த ‘பீப்’ வார்த்தையை தமிழில் தானே சொல்லியிருக்கிறார்.. அங்கே ஆங்கிலத்துக்கு வேலையில்லாமல் போச்சே.. அப்படிப்பார்த்தால் சமுத்திரக்கனி சொன்னது சிம்புவுக்கு பொருந்தவில்லை தானே..?