தமிழக கன்னட அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த சிம்பு


பலவிதமான திறமைகளை கொண்டவர் என்றாலும் கூட, சிம்பு என்றாலே பிரச்சனை செய்பவர் என்கிற பெயர் தான் சினிமா உலகிலும் மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.. மற்றவர்கள் எல்லாம் ஒன்றாக ஒரு ரூட்டில் போனால் இவர் மட்டும் தனியாக வேறு ரூட்டில் போவார் என்பதாகத்தான் இதற்கு முந்தைய நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன.

அப்படித்தான் காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை குறித்து திரையுலகினர் ஒரு பக்கம் போராட்டம் நடத்த, சிம்புவோ தனியாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆனால் அப்போது சிம்புவின் சமூக பொறுப்புள்ள மற்றொரு முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. அதில் மனிதநேயம் பற்றி தெளிவாகவே பேசினார் சிம்பு. ஆனால் அப்படி அவர் பேசியதையும் பல தரப்பினர் சமூக வலைதளங்களில் வழக்கம்போல கிண்டலடிக்கவே செய்தனர்.

அந்த பேட்டியில் பேசிய சிம்பு ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள், அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். இது என்ன முட்டாள்தனமாக பேசுகிறாரே என்றுதான் அவரது பேச்சை நம் ஆட்கள் எடுத்துக்கொண்டார்கள்..

ஆனால் கர்நாடகாவில் உள்ள மக்களின் மனதை சிம்புவின் உருக்கமான பேச்சும் அவர் வைத்த வேண்டுகோளும் அசைத்து விட்டது. சிம்பு கூறியபடி கர்நாடகாவில் உள்ளோர் பலரும் அங்கிருக்கும் அவர்களுடைய தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்தும் வீடியோ எடுத்தும் அதை பகிர்ந்து வருகின்றனர்.

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக, கர்நாடக அரசியல் கட்சிகள் கூட சிம்புவின் வார்த்தைக்கு கன்னட மக்களிடம் கிடைத்த இந்த மதிப்பை பார்த்து அரண்டு போய்விட்டனர். அதுமட்டுமல்ல, நமக்கு காவிரி தண்ணீர் தருவதில் கர்நாடக மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை என்பதையும் அவர்களின் செயல் தெளிவாக உணர்த்தியுள்ளது.

மேலும் கர்நாடகாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தான், காவிரி விவகாரத்தை தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் கர்நாடக மக்கள் வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர். கர்நாடகாவில் மட்டுமல்ல, தமிழர்களிடமும் சிம்புவின் மீதான மரியாதை இப்போது பல மடங்கு உயர்ந்திருப்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது