கன்னித்தீவுக்கு போட்டியாக களம் இறங்கும் சிம்பு-பிரசாந்த்..!

கன்னித்தீவு தொடர்கதைக்கு போட்டியாக சினிமாவில் தங்களாலும் ஒரு படத்தை இழுக்க முடியும்.. ஸாரி.. எடுக்க முடியும் என காட்டிவருபவர்கள் சிம்புவும் பிரசாந்தும்.. காரணம் அது எப்போது முடியும் என தெரியாது.. இவர்கள் படமும் எப்போது முடியும் இல்லை வெளிவரும் எனவும் தெரியாது. அவர்களது படத்தின் இயக்குனர்களை விட்டுவிடுங்கள்… பாவம் வாயில்லா பூச்சிகள்.. (ஒரு பூச்சி மட்டும் ஊர்ந்துகொண்டே போய் ஹைக்கூ எழுதுவது வேறு விஷயம்)

சிம்புவின் படங்கள் சரியான நேரத்தில் வெளிவர முடியாமல் தவிப்பது இரண்டு விதங்களில் தான்.. ‘சண்டக்கோழி’ படத்தில் ராஜ்கிரண் “எங்கேயோ மிச்சம் வச்சுட்டு வந்துருக்கான்” என சொல்வது போல, சிம்பு நடிக்கும் கம்பெனி படத்தை முடித்துவிட்டாலும் கூட, தனது பழைய படங்களின் நட்டக்கணக்குகளை சரிசெய்யாமல் விட்டதால் அந்த ஆப்பு இவருக்கு திரும்பி விடுகிறது.

சரி சொந்த கம்பெனியிலேயே படத்தை எடுக்கலாம் என, இது நம்ம ஆளுதானே என படத்தோட டைரக்டரையும் பார்ட்னர்ஷிப் சேர்த்து தயாரித்தால் அதிலும் பட்ஜெட் எகிறிய பிராப்ளம். சரி… தானாகவே கொஞ்சம் காசை போட்டு மீதிப்படத்தை முடிப்பார் என பார்த்தால் அதிலும் ஈகோ பிரச்சனை வந்து முட்டி நிற்க, படமும் மேற்கொண்டு வளராமல் முட்டுச்சந்தில் நிற்கிறது…

ஆனால் நடிகர் பிரசாந்தின் கதையே வேறு.. தந்தை தான் தயாரிப்பாளர் என்பதால் ஷூட்டிங் நடப்பதில் பணப்பிரச்சனை இல்லை… ஆனால் அவர் நடிக்கும் ‘சாகசம்’ படத்தை தான் “எடுத்தார்கள்… எடுக்கிறார்கள்.. எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்… இன்னும் எடுப்பார்கள்” என்பதுபோல எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.. எங்கே இன்னொரு ‘ஐ’ மாதிரியோ அல்லது ‘பாகுபலி’ மாதிரியோ (இரண்டு பாகங்கள்) ஏதாவது உள்ளுக்குள்ளே பிளான் வைத்திருக்கிறார்களா தெரியவில்லை.

பளிச்சென்று சொன்னால் ‘சாகசம்’ படம் ஆரம்பிக்கப்போகிறோம் என பிரசாந்த் தரப்பில் இருந்து அறிவித்த தேதிக்கு பின்னர், அவ்வளவு பெரிய ஸ்டாரான விஜய்யே ‘ஜில்லா’, கத்தி’ என இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணிவிட்டு இதோ இப்போது ‘புலி’ படத்தையும் ரிலீஸ் பண்ண போகிறார். ஆனால் பிரசாந்த் இப்போது தான் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரையே ரிலீஸ் பண்ண இருக்கிறார்.

அந்த போஸ்டரையும் யார் ரிலீஸ் பண்ணப்போகிறார்கள் தெரியுமா..? நம்ம யங் சூப்பர்ஸ்டார் சிம்புவே தான்.. சரி ஒரு இழுவைக்கு இன்னொரு இழுவை தானே உதவமுடியும்.. இதில் யார் படம் ரிலீஸ் ஆகுமென போட்டி கூட வைக்கலாம்… எப்படியோ நல்லபடியா படம் வெளியாகி ஓடுச்சுன்னா சந்தோசம்தான்ப்பா..