1௦ ரூபாயை பிடுங்கியதால் 5௦ ஆயிரம் ரூபாய் தண்டம் கட்டிய தியேட்டர்


இப்போதெல்லாம் சேவைக்கடணம் என்கிற பெயரில் ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தொடர்கதையாகி விட்டது.. பலருக்கும் இப்படி கொள்ளையடிக்கப்படுகிறோம் என்பதே தெரியவில்லை.. விபரம் அறிந்து அதை தட்டிக்கேட்பவர்களுக்கும் உரிய பதில் கிடைபதில்லை. ஆனாலும் இளைஞர் ஒருவர் இந்த விஷயத்தில் நீதிமன்றம் மூலமாக தியேட்டர் நிர்வாகம் ஒன்றுக்கு மிகப்பெரிய அடி கொடுத்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்திருக்கும் சங்கம் திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் படத்தின் இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்கியிருக்கிறார். அப்போது ரூ140 வாங்கிய ஸ்நாக்சுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்திருக்கிறார்கள். இது பற்றி முறையிட்டதற்கு இது வங்கிக்கான சேவைக் கட்டணம் என சொல்லியிருக்கின்றனர்.

ரசிகர் இதற்கான ரசீதுடன் தனது வங்கியை அணுகியபோது அப்படி சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என வங்கி உறுதியளித்துள்ளது. உடனே இது பற்றி கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் சம்பந்தப்பட்ட ரசிகர். இப்போது ரசிகருக்கு ரூ50,000 அபராதமாக செலுத்த சொல்லி அந்த திரையரங்கின் கேண்டீனுக்கு உத்தரவு பிரப்பித்துள்ளது நீதிமன்றம்.

இதனை ஆறு வாரத்திற்குள் செலுத்தவில்லையெனில் 9% வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளது. திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட விலையை விடவும் கூடுதலாகத்தான் உணவுகளை விற்கிறார்கள். இப்படி மேலும் கூடுதலாக வசூலிக்கும் அடாவடி திரையரங்குகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும்.