விஜய்யை சந்திக்க விஷால் செல்லாதது ஏன்.?

நடிகர்சங்க தேர்தலில் தீவிரமாக உள்ள பாண்டவர் அணியினர், அதாங்க விஷால் அணியினர் ரஜினி, கமல் என சீனியர் நடிகர்களில் ஆரம்பித்து ஒருவர் விடாமல் ஆதரவு கேட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் நடிகர் விஜய்யையும் சந்தித்து ஆதரவு கேட்பது என முடிவு செய்யப்பட்டது.

விஜய்யும் தன்னை சந்திக்க ஈ.சி.ஆர் சாலையில், தனது புதிய படத்தின் வேலைகள் நடக்குமிடத்துக்கு அவர்களை வரச்சொன்னார். ஆனால் விஜய்யை சந்தித்துவிட்டு வந்தது என்னவோ நாசரும் கார்த்தியும் தான்.. விஷால் விஜய்யை சந்திக்க செல்லவில்லை.

ஏற்கனவே கத்தி பட ரிலீஸ் அன்று விஷாலின் பூஜை படம் வெளியானது, அதன்பின் விஜய் படத்திற்கு புலி என டைட்டில் வைத்ததும், விஷால் தனது படத்திற்கு ‘பாயும் புலி’ என டைட்டில் வைத்தது, இது போதாதென்று புலி பட ஆடியோ ரிலீஸ் அன்று தனது ‘பாயும் புலி’ ஆடியோவை ரிலீஸ் பண்ணியது என விஷாலின் நடவடிக்கைகள் எல்லாமே விஜய்க்கு எதிராகவே, அவரை வருத்தப்படுத்தும் விதத்திலேயே அமைந்தன.

இது ஏதேச்சையாக நடந்திருந்தாலும் கூட, இதனால் விஜய்யை எந்த முகத்துடன் சந்திப்பது என நினைத்துதான் விஷால், விஜய்யை சந்திக்க செல்லவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் பாண்டவர் அணி தரப்பிலோ, விஜய் தங்களை சந்திக்க கொடுத்திருந்த நேரம் தங்களுக்கு தெரிவதற்கு முன்னதாகவே, விஷால் தனது ‘பாயும் புலி’ படத்திற்கு டப்பிங் பேசுவதற்கான நேரம் உறுதி செய்யப்பட்டு விட்டதால், டப்பிங்கை விட்டுவிட்டு வர முடியவில்லை.. அதனால் இன்னொரு நாளில் விஜய்யை நான் சந்தித்து பேசிக்கொள்கிறேன். இப்போது நீங்கள் போய் வாருங்கள் என தங்களை மட்டும் அனுப்பியதாக சொல்கிறார்கள்.

ஒருவேளை நடிகர்சங்க பதவியை பிடித்துவிட்டால், அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல விரும்பும் விஷால், வருங்காலதில் விஜய்யுடன் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டார் என்றும், விரைவில் விஜய்யை சந்தித்து ஆதரவு கேட்பதுடன் விஜய்-விஷால் குறித்த சந்தேகம், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. முற்றுப்புள்ளி வைத்தால் சரிதான்.