விவேகம் என்னிடம் இருந்து சுடப்பட்ட கதை ; குமுறும் ‘சுட்ட கதை’ தயாரிப்பாளர்..!


வழக்கம் போலவே விவேகம் படம் வெளியானதும் அதில் கதை என ஒன்று இருக்கிறதா இல்லையா என விவாதங்கள் களைகட்ட ஆரம்பித்து விட்டன. இந்தநிலையில் ‘விவேகம்’ படத்தில் கதை இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அந்தப்படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் கூறியுள்ளார். இந்தமுறை அப்படி கூறியிருப்பது ஒரு உதவி இயக்குனரோ, கதாசிரியரோ அல்ல.. ஒரு தயாரிப்பாளர்..

லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளரான ரவீந்திரன் தான் இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை அவர் குற்றச்சாட்டாகவோ, அல்லது புகாராகவோ கூறாமல், பாதிக்கப்பட்டவனின் குமுறலாகவே வெளிப்படுத்தியுள்ளார். சுடப்பட்ட இந்த கதைக்கும் தன்னுடைய கதைக்கும் அறுபது சதவீதம் ஒரே சாயல் இருக்கிறது என குமுறும் இவர் தான் ‘சுட்ட கதை’ என்கிற படத்தை தயாரித்தவர் என்பது என்னே ஆச்சர்ய ஒற்றுமை.

கடந்த 2013லேயே இவர் ‘ஐ.நா’ என்கிற பெயரில் இந்த கதையை உருவாக்கியதாகவும், அஜித்துக்கு மிக நெருங்கிய ஒருவரிடம் இந்த ஸ்க்ரிப்ட்டை கொடுத்து அஜித்தை வைத்து படம் எடுக்கும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் சில நாட்களில் அந்த நண்பர் அஜித்துக்கு இந்த ஸ்க்ரிப்ட்டில் விருப்பம் இல்லை என திருப்பிக்கொடுத்து விட்டாராம்..

ஆனால் இப்போது வெளியான விவேகம்’ படத்தை பார்த்ததும் தனது கதையின் அறுபது சதவீதம் அப்படியே இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த ரவீந்திரன், அஜித்துக்கோ, சிவாவுக்கோ இதில் தொடர்பு இருப்பதாக தான் நினைக்கவில்லை என்றும், இதன் பின்னணியில் தன்னிடம் கதையை வாங்கிச்சென்று திருப்பிக்கொடுத்த நண்பரின் டபுள் கேம் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரவீந்திரன்.

மேலும் இதுகுறித்து தான் வழக்கு தொடுக்க போவதில்லை என கூறியுள்ள ரவீந்திரன், சம்பந்தப்பட்ட நபராக முன்வந்து இந்த கதை திருட்டை ஒப்புக்கொள்ளாவிட்டால், அதிகாரப்பூர்வமாக தான் எழுதி வைத்திருந்த ஸ்கிரிப்ட்டை வெளியிடப்போவதாகவும், அந்தவிதமாக சங்கடங்கள் அஜித்துக்கோ, சிவாவுக்கோ ஏற்படாமல் இருக்க அந்த நபர் தானாகவே முன்வந்து உண்மையை கூறவேண்டும் என செக் வைத்துள்ளார் ரவீந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *