பாபநாசத்தால் என் படம் நாசமானது விவேக் புலம்பல்


பல வருடங்களாக காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் விவேக் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஹீரோவாக புரமோஷன் பெற்றார். அப்படி வெளியான படம்தான் நான்தான் பாலா. ஆனால் இந்தப்படம் வெளியான சமயத்தில் கமல் நடித்த பாபநாசம் படமும் வெளியானது.. அந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடியதால் விவேக் படத்தை கண்டுகொள்ள ஆளில்லாமல் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் விவேக் தற்போது வெள்ளைப்பூக்கள் என்கிற படத்தில் ஹீரோவாக, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடைபெறுகிறது.. தான் ஹீரோவாக நடித்தால் ஏற்கனவே தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மீண்டும் தொடரும் என அஞ்சி முதலில் இந்த வாய்ப்பை மறுத்தார் விவேக். ஆனால் அவர்தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு நடித்து முடித்தும் விட்டார்

இந்த படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது இது பற்றி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட விவேக் அப்போதுதான் பாபநாசம் படம் தன் படத்தை நாசம் பண்ணிய கதையை விளையாட்டாக குறிப்பிட்டார். அது மட்டுமல்ல இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கமலுக்கும் ஒரு வேண்டுகோளை அந்த விழாவிலே வைத்துவிட்டார் விவேக்.. அவர் சொன்னது போலவே இந்தப் படம் வெளியாகும் வாரத்தில் லாரன்ஸின் காஞ்சனா படம் வெளியாக இருக்கிறது.. அதை வெள்ளைப்பூக்கள் சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.