தனுஷிற்காக டப்பிங் பேசிய கௌதம் மேனன்


இயக்குனர் கௌதம் மேனனின் படங்கள் ஆரம்பிக்கப்படும்போது பரபரப்பாக ஆரம்பிக்கப்படும். ஆனால் வருடங்கள்தான் ஓடுமே தவிர, அவர் படம் ரிலீசாகுமா என்பதே கேள்விக்குறியாகி, எப்படியோ ஒருவழியாக ரிலீஸ் ஆகும். கடந்த சில வருட வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இது நன்றாகவே தெரியும்.

அதே போலத்தான் தற்போது தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா பட நிலைமையும் ஆகியுள்ளது. படம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தனுஷின் சம்பள பாக்கி பிரச்சினையால் படம் வெளியாகாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை எப்படியேனும் வெளியிட்டுவிடலாம் என முடிவு செய்த கௌதம் மேனன், இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பி சான்றிதழ் வாங்கி விட்டார்.

மீதி பணம் ஒண்ணேமுக்கால் கோடியை எண்ணி வைத்தால் தான் டப்பிங் பேசுவேன் என தனுஷ் பிடிவாதம் காட்டிவரும் நிலையில், எப்படி இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பி சான்றிதழ் வாங்க முடிந்தது என பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

ஒருவேளை பணத்தைப் புரட்டி தனுசிற்கு செட்டில் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தாலும் அல்லது தனுஷே இறங்கிவந்து விட்டுக்கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தாலும், அந்த நேரத்தில் படம் வெளியிடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தனுஷுக்கு பதிலாக தானே டப்பிங் பேசி, சென்சார் சான்றிதழ் வாங்கி வைத்து விட்டாராம் கௌதம் மேனன். இது சில சீனியர் நடிகர்களின் படங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைதான்.

இந்த நிலையில் படத்தை பார்த்த தனுஷ் படம் நன்றாக வந்திருப்பதை அறிந்து, தனது சம்பள பாக்கியில் 80 லட்சத்தை விட்டுக்கொடுத்து ஒரு கோடி மட்டும் கொடுத்தால் போதும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என சொல்லிவிட்டாராம். அந்த ஒரு கோடியை திரட்டுவதற்காக கௌதம்மேனன் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்.