லாரன்ஸுக்கு இந்த தைரியம் கைகொடுக்குமா..?


லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

ஒன்று பி.வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவலிங்கா’. இன்னொன்று சாய்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’.. இந்த இரண்டு படங்களையும் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒரு நடிகரின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாவது அபூர்வம்.. அப்படி வெளியானாலும் ஏதோ ஒன்றுதான் வெற்றி பெரும் என்பது இதற்கு முந்தைய வரலாறு.. கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மற்றும் கிழக்கு மலை ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியாகின.. உள்ளத்தை அள்ளித்தா மட்டும் சூப்பர் டூப்பர்ஹிட்டானது.

அதேபோல பரத் நடித்த வெயில் மற்றும் சென்னைக்காதல் இரண்டும் ஒரேநாளில் வெளியானதில் வெயில் மட்டும் ஹிட்டானது.. ஆனால் லாரன்ஸின் இரண்டு படங்களில் ‘சிவலிங்கா’ ஹாரர் த்ரில்லராகவும், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் போலீஸ் ஸ்டோரியாகவும் உருவாகி இருப்பதால் இரண்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. இனி ரசிகர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்..