‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்!

சுசீந்திரன் இயக்கத்தில் அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மேஹ்ரின், துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், சாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வருகிற நவம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப்படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நடிகர் விக்ராந்த்.

விக்ராந்த் பேசும்போது, “இந்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம், ‘பாண்டிய நாடு’ படத்திற்கு பிறகு எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு.

சந்தீப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்தக் குழுவுடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறையுடன் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம்.

‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் இந்த படத்திலும் அழுத்தமான உணர்சிப்பூர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாப்பாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

என்னிடம், ‘எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க.. இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்.. முதலில் சாதுவா காட்டலாம்…’ என்று கண்ணாடியெல்லாம் கொடுத்தாங்க. ‘படம் முழுக்க அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும்…’ என்றார் சுசீந்திரன்.

நானும் அப்படியே நடிச்சிருக்கேன். ‘தொண்டன்’ போன்ற படங்களில் கோபக்காரனை போல் நடித்திருப்பேன். அதுபோல இல்லாமல் இந்தப் படம் அடுத்து வரும் ‘வெண்ணிலா கபடி குழு’வாக இருக்கும். இரண்டிலும் நகைச்சுவையான விஷயங்கள் இருக்க வேண்டும்னு முயற்சி செய்து நடித்துள்ளோம்.

சந்தீப் இந்த படத்தில் இருந்துதான் எனக்கு பழக்கம். நட்பு ரீதியாக நல்ல முறையில் பழகினார். பாடல் காட்சிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளோம். ஹீரோயின் மெஹரின் நடிப்பில் தெலுங்கில் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து அவர்களும் தமிழிலும் மிக பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்.

ஹரிஷ் உத்தமன் அண்ணன் ‘பாண்டிய நாடு’ படத்தில் என்னுடன் முதல் முறையாக நடித்தார். எங்கள் எல்லாருக்கும் அந்த படம் திருப்பு முனையாக இருந்தது அவருடன் மீண்டும் பணியாற்றியதில் மிகுந்த சந்தோஷம்.

அடுத்து ‘வெண்ணிலா கபடி குழு-2’ பண்ணுகிறோம். முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார். அவருக்கு பதில் நான்தான் நடிக்கப் போகிறேன். மற்ற நடிகர்களெல்லாம் அவர்களே தான். படத்தை செல்வசேகரன் சார் இயக்குகிறார். ‘வெண்ணிலா கபடி குழு 2’-காக கபடி முறையாக கற்று வருகிறேன்.. இந்தப் படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும்.

‘வெண்ணிலா கபடி குழு’வின் முதல் பகுதி 1980-ல் நடக்கும் கதை. அக்கதையை பொறுத்தவரை சுசீந்தரன் சாரின் அப்பாதா நிறுவனர். ‘வெண்ணிலா கபடி குழு’ இரண்டாம் பாகம், முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.

‘கவண்’, ‘தொண்டன்’, ‘கெத்து’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடித்து கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர்பார்த்து இருந்த நேரத்தில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடி விட்டேன். இப்பொழுது அதனை குறைக்க ஓட ஆரபித்தேன். இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது.

‘பாண்டிய நாடு’ படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதே போன்று நடிப்பு திறமையை தொடர வேண்டும் என்று ஊக்குவித்தார், மேலும் இன்னும் சில இயக்குநர்களும் பாராட்டினார்கள். அது எனக்கு பலமாக இருந்தது.

அனைவரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும், மேலும் ஊக்குவிக்கிறது. இனி வரும் படங்களில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன்…” என்றார் விக்ராந்த்.