புளூவேல் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு


புளுவேல் விளையாட்டு நிச்சயமாக இது பற்றி கேள்விபடாதவர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் இந்த புளூவேல் என்ற விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது உலகத்தையே உலுக்கியது. இன்றைக்கு இருக்கின்ற பொருளாதார சூழலில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம். படித்தால் தான் வாழமுடியும் ஏன் உயிரோடுவே இருக்கமுடியும் என்ற மனநிலைக்கு எல்லாரும் மாறிவிட்ட நிலையில், பிள்ளைகளுக்கோ பள்ளிகளில் ஏற்படும் நெருக்கடி. பெற்றோர் அரவணைப்பில் இருக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிதான் புளுவேல், மோமோ, பப்ஜி போன்ற ஆன் லைன் கேம்கள் இளைஞர்களை கொன்று குவிக்கிறது. அவர்களை மீட்கவும் பிள்ளைகள் தான் செல்வம் அவர்களை பாதுகாத்திடுங்கள் என்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே புளுவேலின் படத்தின் நோக்கம்.

மேலும், இந்த புளூவேல் விளையாட்டின் மூலம் நேரடியாக பலரும் பாதிக்கட்டிருக்கிறார்கள். அதிலும் தன் உயிரையே இழந்த மதுரையைச் சேர்ந்த இளைஞன் விக்னேஷ் தயார் டெய்சிராணி மற்றும் அவரது சகோதரரும் வந்திருந்து தங்கள் மகனைப் போல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறினார்கள்.

புளூவேல் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது

தயாரிப்பாளர் மது பேசும்போது

புளூவேல் எனக்கு முதல் படம். முதல் படமே தரமான படமாக வந்ததில் பெருமையடைகிறேன். டெக்ஸ்டைல்ஸ் துறையில் இருந்தாலும், சினிமா என்பது எனக்கு விருப்பமாக துறை. இது போல் தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றார்.

டெய்சிராணி பேசும்போது,
என் மகனைப் போல் பாதிக்கப்படும் பலரின் வாழ்க்கையை மீட்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை எடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

கவிஞர் சினேகன் பேசும்போது,

எந்த விஞ்ஞானம் நம் பிள்ளைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறதோ அதே விஞ்ஞனாம் நம் நாட்டை உயர்த்தியிருக்கிறது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் தவறான வழியில் சென்றால் சமூகத்தின் மீது பழி கூறுகிறார்களே தவிர, தங்களிடம் இருக்கும் தவறை உணர்ந்து சரிசெய்ய முயல்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

மக்களுக்கான அரசாங்கம் என்று அமைகிறதோ அன்று தான் நம் நாட்டிற்கு நன்மை கிடைக்கும்.
ஆன்லைனில் டிக்கெட் பதிவில் 25 சதவீதம் யாருக்குச் செல்கிறது என்பதை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

நடிகை பூர்ணா பேசும்போது,

எனக்கு புளூவேல் பற்றித் தெரியாது. எனது சகோதரி உதவி புரிந்தார். முதல் நாள் படப்பிடிப்பில் நான் சிறிது மனசோர்வடைந்தேன். பெரிய நடிகர்கள் இல்லை. புகைப்படக்காரர்கள் அதிகமில்லை. ஆகையால், இரண்டாவது நாள் படப்பிடிப்பிற்குச் செல்ல தயங்கினேன். குறைவான படங்கள் நடித்திருப்பதால் தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேனோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து மிகச் சிறிய பட்ஜெட்டில் தரமான படமாக எடுத்திருக்கிறார்கள். இதுமாதிரி உண்மை சம்பவத்தை கூறியிருக்கும் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

குழந்தைகளுக்கு பெரியவர்கள் தான் எல்லா விஷங்களையும் பழக்குகிறார்கள். அவர்கள் ஆசைப்படுவதை நன்மை தீமை பற்றி யோசிக்காமல் செய்யும் பொறுப்பற்ற பெரியவர்களால் தான் குழந்தைகள் தவறாகப் பாதைக்குச் செல்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கபிஷ், நன்றாக நடித்திருக்கிறான். 11-வது மாடியில் நின்று நடிக்கும்போது எனக்கே பயமாக இருந்தது. ஆனால், அவன் தைரியமாக நடித்திருந்தான். அவனுடைய அப்பாவித்தனம் தான் படத்திற்க்கு மிக பெரிய பலம் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் இசை தகட்டை வெளியிட்ட, இந்த விளையாடினால் உயிரிழந்த விக்னேஷின் தாயார் டெய்சிராணி பெற்றுக்கொண்டார்.