கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி – கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைப்பு!


கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேன்ஸ் திரைப்பட விழாவை தள்ளிவைக்க முடிவு எடுத்துள்ளோம். இதற்கான சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அதே நேரத்தில் பிரான்ஸ் அதிபரின் முழு அடைப்பு உத்தரவை அனைவரும் மதித்து இதுபோன்ற இக்கட்டான சூழலில் ஒட்டு மொத்த உலகத்தோடும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 12-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறவிருந்த கேன்ஸ் திரைப்பட விழா ஜூன் மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.